இனியும் சுப்மன் கில் தேவையா.. சதமடித்த தமிழக வீரர்.. இங்கிலாந்து லயன்ஸை பொளந்த சாய் சுதர்சன்!
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் தமிழக வீரர் சாய் சுதர்சன் சதமடித்து அசத்தியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தொடங்கி இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் 12 இன்னிங்ஸ்களாக சொதப்பி வருகிறார். அதுமட்டுமல்லாமல் நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வரும் சுப்மன் கில், கடந்த 12 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே கேஎல் ராகுல், விராட் கோலி உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்கள் விலகிய நிலையில், பொறுப்புடன் விளையாட வேண்டிய சுப்மன் கில் சொந்த மண்ணிலேயே சொதப்பி வருகிறார். இதனால் அடுத்த போட்டியில் சர்ஃபராஸ் கானை களமிறக்க வேண்டும் என்று விவாதங்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு போட்டியளிக்கும் வகையில் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் விளையாடி வருகிறார். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான கடைசி அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி விளையாடி வருகிறது. 3வது நாள் ஆட்டத்தை இந்திய ஏ அணி 148 ரன்களுடன் தொடங்கியது. 54 ரன்களுடன் களமிறங்கிய சாய் சுதர்சன், மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நிதானமாக ஆடிய சாய் சுதர்சன் உணவு இடைவேளைக்கு முன்பாகவே சதம் விளாசி அசத்தினார். இதன்பின் அதிரடியாக ரன்கள் குவித்த அவர், 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஏற்கனவே இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியின் எல்லையில் இருந்த போது 208 பந்துகளை எதிர்த்து 97 ரன்களை விளாசி அசத்தினார்.
சாய் சுதர்சனின் அபாரமான ஆட்டத்தால் இந்திய ஏ அணி 409 ரன்கள் குவித்தது. இதனால் இங்கிலாந்து லயன்ஸ் அணி வெற்றிபெற 403 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சாய் சுதர்சனின் ஆட்டம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனால் இங்கிலாந்து அணியுடனான அடுத்த 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.