ஃபிட்னஸ் டயட் பாலோ பண்ணும் போது இப்படியொரு சாப்பாடா? கோபத்தில் கொந்தளித்த ஹர்திக் பாண்டியா!
இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது காயம் அடைந்த ஹர்திக் பாண்டியா அதன் பிறகு எந்த தொடரிலும் பங்கேற்கவில்லை. காயத்திலிருந்து மீண்டு வந்த ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். வரும் மார்ச் 22 ஆம் தேதி ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் தொடங்குகிறது. முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உடற்பயிற்சி, டயட், ஃபிட்னஸ், ஆன்மீகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும், ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் பயிற்சி, ஜிம் உடற்பயிற்சி என்று நாள்தோறும் வீடியோ வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஃபிட்ன்ஸ் டயட்டிற்காக சர்வரிடம் கோபப்படும் வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த வீடியோவில், ஐபிஎல் 2024 ஷூட்டிற்காக ஹர்திக் பாண்டியா ரெடியாகிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அவருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து புகார் செய்வது போன்ற வீடியோ காட்சி இடம் பெற்றுள்ளது. தனது சமையல்காரர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பற்றி கேட்கிறார். ஹர்திக் பாண்டியாவிற்கு மதிய உணவிற்கு டோக்லா மற்றும் ஜிலேபி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அது தனது ஃபிட்னஸிற்கு ஏற்ற உணவு இல்லை என்பதில் தெளிவாக இருக்கிறார். சர்வர், அவரை சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். அதோடு அந்த வீடியோ காட்சி முடிவடைகிறது. எனினும், சில ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவின் ஃபிட்னஸ் அர்ப்பணிப்பை பாராட்டி வருகின்றனர்.