உங்களுக்கு அடிக்கடி விக்கல் வருகிறதா..? ஒருவேளை ஆபத்தான இந்த நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்!
நம் எல்லாருக்குமே சில சமயங்களில் விக்கல் ஏற்படும். இது சில நிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும், அதற்குள்ளாகவே நமக்கு கடுமையான அசௌகர்யத்தை கொடுக்கக் கூடியது. ஒரு சிலருக்கு இந்த விக்கல் தொடர்ச்சியாக அடிக்கடி ஏற்படும். இது சில ஆபத்தை முன்னறிவிக்கும் எச்சரிக்கை அறிகுறியாக கூட இருக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
விக்கல் என்பது ஒரு அனிச்சையான செயல். நம்முடைய மார்பு மற்றும் அடிவயிற்று தசைகளுக்கு இடையே ஏற்படும் சுருக்கம் காரணமாகவே விக்கல் வருகிறது. ஆனால் இது உங்களை தாக்கவிருக்கும் பக்கவாதத்தின் அறிகுறி என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். சாய்வான முகம், ஒரு கை மட்டும் பலவீனமாக இருப்பது அல்லது தெளிவற்ற பேச்சு போன்ற அறிகுறிகள் இருந்தால், அவர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
பக்கவாதத்தின் அறிகுறிகள் :
முகம் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்ளும். அந்த நபரால் சிரிக்கவோ, வாயைத் திறக்கவோ முடியாது. சில சமயங்களில் அவரது கண், வாய் கூட கோணலாக மாறும்.
ஒரு கையில் உணர்வில்லாமல் போவதாலோ அல்லது பலவீனமாக இருப்பதாலோ, ஒருவரால் தனது இரண்டு கைகளையும் மேலே தூக்க முடியாது.
இந்த அறிகுறி இருக்கும் நபரால் தெளிவாக பேச முடியாது. நாம் என்ன சொல்கிறோம் என்பதையும் அவர்களால் முழுதாக புரிந்துகொள்ள முடியாது.
நமது சுவாசத்தையும் உடல் அசைவுகளையும் கட்டுப்படுத்தக் கூடிய மூளையில் உள்ள பகுதிகள் பாதிக்கப்படுவதன் காரணமாக கூட சில சமயங்களில் பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும். இதனால் கூட விக்கல் வரலாம் என ஆய்வுகள் கூறுகின்றன.
பக்கவாதம் தாக்கும் போது உடனடியாக விக்கலோ அல்லது மயக்கம் ஏற்படுவது போன்ற உணர்வோ வந்தால் பயப்பட வேண்டியதில்லை. உங்களால் எதையும் செய்ய முடியாத அளவிற்கு அறிகுறிகளின் தீவிரத்தன்மை இருந்தால் மட்டுமே நீங்கள் கவலைப்பட வேண்டும். உதாரணமாக பக்கவாதம் பாதித்த ஒருவர் மிகவும் பலவீனமாக உணர்வார். அவரால் படுக்கையில் இருந்து கூட எழ முடியாது.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் பக்கவாத அறிகுறிகளில் உள்ள வித்தியாசம்:
பொதுவாக பக்கவாதம் தாக்கும் போது ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறு விதமாக அறிகுறிகள் தோன்றுகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. ஹார்மோன் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெண்களிடம் இருக்கும் ஈஸ்ட்ரோஜெனில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது மூளையில் ஏற்படும் காயத்திற்கு எதிராக பாதுகாக்கிறது. மூளைக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் தமனியில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் ஈஸ்ட்ரோஜென் உதவுகிறது.
ஆனால் பெண்களின் வயது ஏற ஏற, ஈஸ்ட்ரோஜென் அளவும் குறைகிறது. இதனால்தான் ஆண்களை விட பெண்களை பக்கவாதம் தாக்க அதிக வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மெனோபாஸ் சமயத்தில் ஈஸ்ட்ரோஜென் அளவு கணிசமாக குறைவதால், அதன்பிறகு பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஒருவருக்கு பக்கவாதம் தாக்கினால் என்ன ஆகும்?
1. உடலின் ஒரு பக்கம் முற்றிலும் செயலிழந்துவிடும்.
2. திடீரென கண் பார்வை மங்கும் அல்லது பறிபோகும்.
3.மயக்கம், மனதில் குழப்பம், பிறர் கூறுவதை புரிந்துகொள்வதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
4. எளிதில் நோய்வாய்ப்படுவார்கள்.
5. சாப்பிட்ட உணவை விழுங்க சிரமப்படுவார்கள்.
6. வாழ்க்கையில் இதற்கு முன் அனுபவித்திராத கடுமையான தலைவலி.
7. உணர்வை இழப்பது போன்ற பாதிப்புகள் ஏற்படும்.