நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா..? இந்த தவறுக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படலாம்!
நீங்களும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவராக இருந்தால் சில கிரெடிட் கார்டின் கட்டணங்களைப் பற்றி தெரிந்து கொண்டு செலவு செய்வது நல்லது. பல பயனர்கள் கிரெடிட் கார்டுகளில் கிடைக்கும் ரிவார்டு பாயிண்ட்களுக்காக தினசரி அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனாலும் அதிக கட்டணம் விதிக்கப்படுகிறது.
பல வங்கிகள் பயனர்களிடமிருந்து கிரெடிட் கார்டுக்கான வருடாந்திர கட்டணங்களை வசூலிக்கின்றன. இவை ஒவ்வொரு வங்கிக்கும், கிரெடிட் கார்டின் மாடலுக்கு தகுந்தார் போல மாறுபடும். சில தனியார் நிறுவனங்களும் வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றன. இருப்பினும், பயனர்கள் தங்கள் வரம்பை விட அதிகமாக செலவு செய்தால் வருடாந்திர கட்டணத்தை திரும்ப பெறலாம். உங்கள் வங்கி கிரெடிட் கார்டுக்கு ஆண்டுக் கட்டணங்களை வசூலித்தால், மற்ற அனைத்து வங்கிகளை ஒப்பிட்டுப் பார்த்து அல்லது தேவை இருக்கும்போது மட்டும் கிரெடிட் கார்டை பயன்படுத்துவது நல்லது.
கிரெடிட் கார்ட் மீதான வட்டி
பயனர்கள் குறிப்பிட்ட நேரத்தில் கிரெடிட் கார்டு பில்லை செலுத்தவில்லை என்றால், வங்கி அதற்கு தாறுமாறாக வட்டியை விதிக்கிறது. இந்த வட்டியைத் தவிர்க்க, பயனர்கள் கிரெடிட் கார்டின் குறைந்தபட்ச தொகையை செலுத்த வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் கிரெடிட் கார்டு கட்டணத்தை நியாபகம் வைத்து முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பிட்ட தேதியில் கிரெடிட் கார்ட் கட்டணத்தை செலுத்தவில்லை என்றால் சில வங்கிகள் 40 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன.
கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்க வேண்டாம்
உங்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டால், ஒருகாரணத்திற்கு கொண்டும் கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுக்கவே கூடாது. பணத்தை எடுக்க கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால், அதற்குக் அதிகப்படியான கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை மறக்க வேண்டாம். நீங்கள் அந்த தொகைக்காக கிரெடிட் கார்டு பில் செலுத்தும் வரை, வட்டி கூடுகிறது. இதனால் வேறு வழி இல்லாத சூழ்நிலையை தவிர மற்ற நேரங்களில் கிரெடிட் கார்ட் மூலம் பணத்தை எடுக்க வேண்டாம்.
கூடுதல் கட்டணம்
கிரெடிட் கார்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெட்ரோல் அல்லது டீசல் நிரப்ப கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றன. பல வங்கிகள் இந்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பயனர்களுக்கு அளிக்கின்றன. ஒருவேளை உங்கள் வங்கி இந்த கூடுதல் கட்டணத்தை உங்களுக்கு திருப்பிச் செலுத்தவில்லை என்றால், வங்கியிடம் கேட்பது நல்லது. அதே போல கிரெடிட் கார்டை பயன்படுத்தும் முன் கூடுதல் கட்டணம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம்
வெளிநாடுகளில் கிரெடிட் கார்ட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தக் கட்டணம் மிகவும் அதிகமானது. நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்கிறீர்கள் என்றால், அங்கு உங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் எவ்வளவு பரிவர்த்தனை கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை உங்கள் வங்கியில் இருந்து உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது.