வீட்டுக்கடன், கார் கடன் இருக்கா? ஆர்பிஐ கொடுக்கும் குட் நியூஸ்!
பலரும் எதிர்பார்த்தபடி, ரெப்போ விகிதத்தை 6.5 சதவீதமாக வைத்திருக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வணிக வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான விகிதமாகும். இதற்கிடையில், கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் ரிசர்வ் வங்கி அறிக்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
ரெப்போ விகிதம் மாறாமல் இருப்பதால் உங்கள் வீடு மற்றும் கார் கடன் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாட்டின் அடிப்படையில் வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (NBFCs) வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மாற்றுகின்றன அல்லது பராமரிக்கின்றன. ஆனால், ரெப்போ விகிதத்தில் ரிசர்வ் வங்கியின் நிலைப்பாடு எதுவாக இருந்தாலும், கடன் வழங்குபவர்கள் உள் காரணிகளுக்கு உட்பட்டு வட்டி விகிதத்தை மாற்றலாம். இருப்பினும், வங்கிகள் அல்லது NBFCகள் வீடு மற்றும் கார் கடன்களுக்கான வட்டி விகிதங்களை இப்போதைக்கு தொடாது. இதன் மூலம் வீடு, கார் கடன் வாங்கிய கோடிக்கணக்கான மக்களுக்கு நிம்மதி கிடைக்கும் என கருதப்படுகிறது.
ரெப்போ விகிதம் வீடு மற்றும் கார் கடன்களை எவ்வாறு பாதிக்கிறது?
ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி தனது பணத்தை வணிக வங்கிகளுக்கு அளிக்கும் வட்டி விகிதமாகும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தினால், வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்கும் பணத்திற்கு அதிக வட்டி செலுத்தும். வீடுகள், கார்கள் மற்றும் பிற வகையான கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதன் மூலம் வங்கிகள் அந்தப் பணத்தை திரும்பப் பெறுகின்றன. இதன் விளைவாக, EMI அதிகமாக இருக்கும். கடன் வாங்குபவர்கள் தங்கள் பைகளில் இருந்து அதிகப் பணத்தைச் செலவிட வேண்டியிருக்கும்.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பல ஆய்வாளர்களின் எதிர்பார்ப்புகளை விட அதிகமாக உள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்கான ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் வலுவாக உள்ளன. நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளின் வேகம் 2024-25 நிதியாண்டிலும் தொடரும் என்றார். உணவுப் பொருட்களின் விலையில் உள்ள நிச்சயமற்ற தன்மை, பணவீக்கத்தை பாதிக்கிறது. சில்லறை பணவீக்கத்தை இலக்கு வரம்பிற்குள் நான்கு சதவீதத்திற்குள் கொண்டு வருவதில் எந்த மாற்றமும் இல்லை என்றார். சில்லறை பணவீக்கம் நடப்பு நிதியாண்டில் 5.4 சதவீதமாகவும், 2024-25ல் 4.5 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தின் வளர்ச்சி 2024ல் நிலையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள் விநியோக அமைப்புகளை பாதிக்கின்றன, இதனால் கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் விலைகள் மீதான அழுத்தம் அதிகரிக்கிறது என்று அவர் கூறினார்.