பேடிஎம் பேமெண்ட்ஸ் கணக்கு வைத்துள்ளீர்களா? முதலில் இதை செய்துவிடுங்கள்!
இந்தியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நிறுவனமான பேடிஎம் தற்போது சவாலான காலகட்டத்தில் உள்ளது. பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமாக தொடங்கப்பட்ட பேடிஎம் பேமெண்ட் வங்கியின் செயல்பாடுகளுக்கு ரிசர்வ் வங்கு முழுமையான தடை விதித்துள்ளது.
விதிகளுக்கு இணங்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து ரிசர்வ் வங்கி இந்த தடையை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பாஸ்டேக் உரிமையாளர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளரா நீங்கள்?: ரிசர்வ் வங்கியின் அறிவிப்பின் படி, பிப்ரவரி 29, 2024 க்கு மேல் பேடிஎம் பேமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் எந்த வித செயல்பாடுகளும் நடைபெறாது. எனவே பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்கள், ஏற்கனவே தங்களது கணக்கில் வைத்துள்ள பணத்தை எடுத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக வாடிக்கையாளர்களின் சேமிப்பு வங்கி கணக்குகள், நடப்பு கணக்குகள், சுங்கச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக், நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டுகள் மற்றும் பிற சேவைகளில் உள்ள பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதற்கு பிப்ரவரி 29 வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 29க்கு மேல் எந்த விதமான பேடிஎம் கணக்குகளிலும் பணம் செலுத்தவோ, வரவு வைக்கவோ அல்லது பணப்பரிவர்த்தனை செய்யவோ முடியாது.
எனவே நீங்கள் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்கள் எனில் முதலில் அந்த கணக்கை முடித்து கொள்ளுங்கள். அதற்கான வழிமுறைகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.
பேடிஎம் கணக்கை மூடுவது எப்படி?:
பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் எளிதாக பேடிஎம் செயலியிலே கணக்கை முடித்து கொள்ள முடியும்.
1. உங்கள் மொபைல் எண்ணை உள்ளீடு செய்து பேடிஎம் அக்கவுண்ட்டில் லாகின் செய்யவும்.
2. பின்னர், ஹோம் ஸ்கிரீனில் “☰” இந்த ஐகானை கிளிக் செய்யவும்
3. ’24×7 Help’ என்ற பிரிவுக்கு செல்லவும்
4. ‘Profile Settings’ என்ற பகுதிக்கு செல்லவும்
5. ‘I need to close/delete my account’ என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்
6. பின்னர், பேடிஎம்மில் கணக்கை முடித்து கொள்வதாக கோரிக்கை வைக்க வேண்டும்
7. பேடிஎம்-இன் வாடிக்கையாளர் சேவை மையம் உங்கள் விண்ணப்பத்தை நடைமுறை செய்யும்
8. ஒருவேளை உங்கள் பேடிஎம் வங்கி கணக்கில் பணம் வைத்திருந்தால் அதனை வேறு வங்கி கணக்கிற்கு மாற்றிய பிறகு தான் கணக்கை மூட வேண்டும் என விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற வங்கிகளில் கணக்கை முடித்து கொள்ள வேண்டுமெனில், நேரடியாக வங்கிக்கு செல்ல வேண்டி இருக்கும். ஆனால் இந்த நடைமுறைகள் அனைத்தையும் பேடிஎம் செயலியிலேயே மேற்கொள்ள முடியும்.