போலி முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்கினால் எத்தனை வருஷம் ஜெயில் தெரியுமா? மசோதா நிறைவேறியது!
போலியான முகவரி கொடுத்து சிம் கார்டு வாங்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் தொலைத் தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் புதிய சரித்திரத்தைப் படைத்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து கேள்வி கேட்டதற்காக எதிர்க்கட்சி எம்பிக்கள் 146 பேர் படிப்படியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்திய அரசியல் வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் இப்படி நிகழ்ந்தது இல்லை.
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது. நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் பல்வேறு மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று தொலைத் தொடர்பு மசோதா 2023.
தொலைத் தொடர்பு மசோதா 2023 -ன் முக்கிய அம்சங்கள்:
– தொலைத் தொடர்பு மசோதா 2023 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. இந்த மசோதா உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளுங்கள் (KYC) என்ற கடுமையான விதிமுறைகளுடன் வாடிக்கையாளர்களப் பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது.
– போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி சிம் கார்டு வாங்கினால் 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
– தொலைபேசி எண்ணில் மோசடி செய்பவர்களுக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
– சிம் பாக்ஸ் போன்றவற்றின் மூலம் தொலைத்தொடர்பு சேவையைப் பயன்படுத்தினால் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
– வேறொருவரின் அடையாளச் சான்றைப் பயன்படுத்தி மோசடியாக சிம் கார்டு வாங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.
– மாநில அரசு தலைமையிலான சர்ச்சைத் தீர்வுக் கட்டமைப்பு. மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி உரிமைப் பிரச்சனைகளைத் தீர்மானிப்பார்கள்.
– தொலைத்தொடர்பு கட்டமைப்பை நிறுவுவதற்கு, பொதுச் சொத்தாக இருந்தால், குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனுமதி வழங்க வேண்டும்
– தனியார் சொத்தாக இருந்தால், உரிமையாளருக்கும், தொலைத் தொடர்பு கட்டமைப்பை நிறுவும் நபருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இவை அனைத்தும் தொலைத் தொடர்பு மசோதா 2023-ல் இடம் பெற்றுள்ளன.