காணும் பொங்கல் என்ற பெயர் எவ்வாறு உருவாகியது தெரியுமா ?
காணும் பொங்கல் என்பதை கன்னிப் பொங்கல் என்றும் அழைப்பதுண்டு. கிராமங்களில் கன்னிப் பொங்கல் என்ற பெயரிலேயே பல இடங்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஊரில் உள்ள கன்னிப் பெண்கள் அனைவரும் ஒரு இடத்தில் கூடி, ஆடிப்பாடி இந்நாளில் மகிழ்வதுண்டு. அவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து கொண்டு வந்த பலவிதமான பொருட்களை கொண்டு பொதுவாக ஒரு இடத்தில் ஒரே பொங்கலாக வைத்து, பகிர்ந்து உண்டு மகிழ்வது உண்டு. வீட்டில் திருமண வயதில் இருக்கும் ஆண்கள் அல்லது பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என வீட்டில் பொங்கல் வைத்து இந்த நாளில் குலதெய்வத்திற்கு படைத்து வழிபடுவார்கள்.
காணும் பொங்கல் அன்று காலை 9 முதல் 12 வரையிலான நேரத்தில் பொங்கல் வைத்து குலதெய்வத்திற்கு படைத்து, விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். தடைகள் விலக வேண்டும் என வேண்டிக் கொள்ளலாம். பொங்கல் படைத்து வழிபட்ட பிறகு வீட்டில் இருக்கும் பெரியவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற வேண்டும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத்தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்.
உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து விருந்து கொடுத்து அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள். அனைவரும் அன்று குடும்பத்தில் ஒன்றுகூடி காணப்படுவதால்தான் இது காணும் பொங்கல்.
அதோடு இளம் வயதினர் தங்களின் உறவினர்களின் வீடுகளுக்கு சென்று, அங்குள்ள பெரியவர்களை கண்டு பொங்கல் விழா பற்றியும், நம்முடைய பாரம்பரிய, பண்பாட்டு முறைகள் பற்றியும் கேட்டு தெரிந்து கொள்வார்கள். பிறகு வயதானவர்கள், வயதில் மூத்தவர்களின் கால்களில் விழுந்து ஆசி பெற்று, அவர்களிடம் பரிசு பெறுவார்கள். இவ்வாறு நம்முடைய கலாச்சாரத்தை பற்றி தெரிந்து கொள்வதுடன், பெரியவர்களின் ஆசிகளை பெறுவதற்காக உண்டாக்கப்பட்டதே காணும் பொங்கல் திருநாளாகும். அதாவது கண்டு, மகிழ்ந்து, ஆசி பெறும் பொங்கல் திருநாள் என்பதால் இதற்கு காணும் பொங்கல் என்ற பெயர் உண்டாயிற்று.