வெஸ்டர்ன் டாய்லெட்டை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா..? முழு விபரம் இதோ
எல்லோருக்கும் வெஸ்டர்ன் டாய்லெட்டை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அது நம் இந்திய முறைக்கு முற்றிலும் புதியது என்பதால் பலருக்கும் அது அந்நியமான விஷயமாக இருக்கலாம். இருப்பினும் பொது இடங்களில் அல்லது கார்பரேட் சூழ் உலகில் வெஸ்டர்ன் டாய்லெட்டுகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் அதை பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வதிலும் தவறில்லை.
எங்கும் நாம் வாழ்வதற்கான தேவைகளை கற்றுக்கொள்வதுதான் நம்மை நல்ல சர்வைவராக மாற்றும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே வெஸ்டர்ன் டாய்லெட்டை எப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் முழுமையான தொகுப்பை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
வெஸ்டர்ன் டாய்லெட் அறை எப்படி இருக்கும்..?
இந்திய டாய்லெட் முறையிலிருந்து முற்றிலும் வேறுபட்டதுதான் இந்த வெஸ்டர்ன் டாய்லெட். இதில் நாம் நாற்காலியில் அமர்வதுபோல் உட்கார்ந்தே இயற்கை உபாதைகளை கழிக்கலாம். இது முதியவர்களுக்கு மிகவும் வசதியானது என்றே சொல்லலாம்.
இதில் நீங்கள் தனியாக தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. இதன் சிங்க் தண்ணீர் நிரப்பிய தொட்டியுடனே இருக்கும். அந்த தொட்டியின் மேல் உள்ள பட்டனை அழுத்தினால் போதும் கழிவுகளை நீக்கிவிடும்.
டாய்லெட் சீட் இடதுபுறம் பேப்பர் ரோல் இருக்கும். இதை நீங்கள் அமரும் டாய்லெட் சீட் மீது இருக்கும் ஈரத்தை துடைத்து எடுக்க அல்லது கறைகள் இருப்பின் சுத்தம் செய்ய பயன்படுத்திக்கொள்ளலாம். கைகளை துடைத்துக்கொள்ளவும் பயன்படுத்தலாம். அதன் அருகே குப்பை தொட்டியும் வைக்கப்பட்டிருக்கும்.
வெஸ்டர்ன் டாய்லெட் பயன்படுத்தும் முறை :
நீங்கள் வெஸ்டர்ன் டாய்லெட்டின் சீட் மீது நேரடியாக நாற்காலியில் அமர்வதுபோல் அமர்ந்துகொள்ளலாம். அதன் மீது ஏறியெல்லாம் உட்காரக்கூடாது.
அமர்வதற்குமுன் சீட்டை சுற்றியுள்ள ஈரத்தை துடைத்து எடுங்கள். ஈரம் இல்லாவிட்டாலும் சுற்றிலும் துடைத்துவிட்டு அமர்வது நல்லது.
அதேபோல் அமரும் முன் ஒரு முறை ஃபிளஷ் செய்வதும் நல்லது. சிங்கை சுற்றிலும் அழுக்கு இருப்பின் நீங்கிவிடும். பொதுக்கழிப்பிடமாக இருப்பின் கட்டாயம் ஃபிளஷ் செய்தபின் பயன்படுத்துங்கள். இதனால் சிறுநீர் பாதை தொற்று வராமல் தவிர்க்கலாம்.
கழிவறை சென்று வந்த பின் கைக்கழுவும் சிங்கில் கை கழுவிக்கொள்ள வேண்டும். பின் டிஷ்யூ பேப்பர் கொண்டு ஈரத்தை துடைத்துக்கொள்ளலாம்.
கழிவை வெளியேற்றியபின் எப்படி கழுவ வேண்டும்..?
கழிப்பறை இருக்கைக்கு வலதுபுறத்தில் கழுவுவதற்கான ஸ்பிரே கொண்ட பைப் இருக்கும். அது சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும்.
அதன் வால்வை அழுத்திப்பிடித்தால் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும். அந்த பைப்பை உங்களுக்கு சௌகரியமான வாட்டத்தில் பிடித்து கழுவலாம். அதாவது சிலர் முன்புறமாக பைப் ஸ்பிரே செய்து கழுவுவார்கள். சிலர் பின்புறமாக பிடித்து ஸ்பிரே செய்து கழுவுவார்கள். எனவே உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ளலாம்.
பின் டாய்லெட் பேப்பரை பயன்படுத்தி ஈரத்தை துடைத்து எடுக்கலாம். கழிவறையை விட்டு வெளியேறும் முன் சீட்டை சுற்றிலும் உள்ள ஈரத்தையும் துடைத்து காகிதத்தை குப்பை தொட்டியில் போடுங்கள். இதனால் உங்களுக்கு பின் வருவோருக்கு முகம் சுழிக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.