கொத்தமல்லி டீ குடித்தால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
கொத்தமல்லி இலைகள் பொதுவாக ஒவ்வொரு வீட்டிலின் சமையலறையிலும் தென்படும் ஒரு வாசனை தாவரமாகும். பல ஆண்டுகளாக, உணவுகளின் சுவையை அதிகரிக்கவும் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் பல்வேறு வழிகளில் கொத்தமல்லி தழைகள் பயன்படுத்தப்படுகிறது. சிலர் கொத்தமல்லி இலைகளைப் பயன்படுத்தி சட்னி தயாரிப்பார்கள். கொத்தமல்லி இலைகள் நரம்புகளை ஊக்குவிக்கும் ஒரு நல்ல மருந்தாக செயல்படுகிறது.
இது மறதியை கட்டுபடுத்தி நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது. மேலும் வாய்ப்புண்களை குணப்படுத்தவும் சுவாச புத்துணர்ச்சியை அதிகரிக்கவும் செய்கின்றன. இருப்பினும், சிலர் கொத்தமல்லி இலைகளை அதிகம் விரும்பமாட்டார்கள். இதனால் கொத்தமல்லி இலைகளை சமைக்கும் உணவில் சேர்க்கமாட்டார்கள். மேலும் கொத்தமல்லி சட்னியை அதிகம் விரும்பமாட்டார்கள். நீங்கள் அவர்களில் ஒருவராக இருந்தால், உங்கள் ஆரோக்கியத்தை அதிகரிக்க கொத்தமல்லி தேநீர் குடிப்பதை பழக்கமாக்கி கொள்ளலாம். இதனை தயாரிப்பது என்பது மிகவும் எளிது.
கொத்தமல்லி இலை டீ செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி இலை – 1 கப்
நட்சத்திர பூ – 1
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
தண்ணீர் – 1 ½ கப்
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதனை கொதிக்க வைக்க வேண்டும். ஒரு நிமிடம் கழித்து, கொதிக்கும் தண்ணீரில் நட்சத்திர பூ மற்றும் மஞ்சள்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும். இப்பொது பாத்திரத்தை மூடி சுமார் 2 முதல் 3 நிமிடங்கள் தண்ணீரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர், அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வாய்த்த தண்ணீரை வடிகட்டி ஒரு கப்பில் ஊற்றவும்.
அவ்வளவுதான் கொத்தமல்லி தேநீர் தயார். நீங்கள் விரும்பினால் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.
கொத்தமல்லி இலை தேநீரின் ஆரோக்கிய நன்மைகள்:
1. எலும்பு ஆரோக்கியத்திற்கு சிறந்தது : ஆரோக்கியமான உடல் இயக்கத்திற்கு எலும்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை நல்ல நிலையில் இல்லையென்றால், நீங்கள் மூட்டு மற்றும் முழங்கால் வலியால் பாதிக்கப்படுவீர்கள். இந்த சிக்கல்களைத் தவிர்க்க, கொத்தமல்லி தேநீர் குடிப்பது நல்லது. எலும்புகளுக்கு தேவையான கால்சியம் இதில் நிரம்பியுள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்து உங்கள் எலும்புகளைப் பாதுகாப்பதோடு அவை வளரவும் உதவும்.
2. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது : கொத்தமல்லி இலைகள் டீ இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இருக்கும் கால்சியம் அயனிகள், இரத்த நாளங்களின் பதற்றத்தை தளர்த்துவதாக அறியப்படுகிறது. இது உங்கள் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதன் மூலம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பல்வேறு இருதய பிரச்சினைகளுக்கான வாய்ப்புகளை குறைப்பதற்கு உதவுகிறது.
3. தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது : கொத்தமல்லி டீ உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு ஆச்சரியமாக பலன்களை தருவது மட்டுமல்லாமல், உங்கள் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இந்த டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரம்பியுள்ளது. எனவே உங்கள் சருமத்தை, நச்சுகள் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து விடுபட அனுமதிக்கிறது. உங்கள் சருமத்தை உள்ளே இருந்து சுத்தப்படுத்துவதால், அது வெளிப்புற தோல் எந்த பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்.