காவடி பிறந்த வரலாறு தெரியுமா
அகஸ்திய முனிவரின் சீடர்களுள் ஒருவன் இடும்பன். குருவின் கட்டளைக்கிணங்க இடும்பன் கவுதடி என்னும் தடியின் இரு புறங்களிலும் சிவகிரி மற்றும் சக்தி கிரி என்னும் இரண்டு மலைகளை கட்டி தொங்கவிட்டு பொதிகை மலையை நோக்கி சென்றான்.
செல்லும் வழியில் பழனி என்ற இடம் வந்தது. தடியுடன் மலைகளை கீழே வைத்தான் களைப்பு தீர இளைப்பாறி முடிந்ததும் மலையை தூக்க முயன்றான்.
முருகன் இவ்விரு மலைகளையும் திருவாவினன்குடியில் நிலைபெற செய்யவும் இடும்பனுக்கு அருளவும் விரும்பி ஒரு திருவிளையாடல் நிகழ்த்தினார். முருகன் சிறுவனாக வந்து இடும்பனின் தோல்வியை கேலி செய்தான். சிறுவன் முருகன்தான் என அறியாத இடும்பன், சிறுவனை பிடிக்க முயற்சித்தான். தனது முயற்சியின்போது அவன் தவறுதலாக கீழே விழுந்து விட்டான். பின்னர் முருகன் இடும்பனை காப்பாற்றி இடும்பனின் வேண்டுகோளுக்கு இணங்க பழனி முருகனின் காவல் தெய்வமாக இருக்க அருளினார். மேலும், காவடி சுமந்து வரும் பக்தர்களின் குறைகளுக்கு நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற வரத்தினையும் கேட்டு வாங்கினான் இடும்பன். அன்றிலிருந்து காவடி சுமந்து வரும் பக்தர்களுக்கு முருகப்பெருமான் பெருமாள் அருள்புரிவதாக ஐதீகம்.
காவடிகளில் மொத்தம் இருபது வகைகள் இருப்பதாக ஆகம விதிகள் கூறுகின்றன. ஒவ்வொரு வகை காவடிக்கும் ஒவ்வொரு வகை பலன் என்று கூறப்படுகிறது. காவடி எடுப்பவர்கள் அலகு குத்திக் கொள்வதும் வழக்கத்தில் இருக்கிறது.