குருவாயூர் கோயில் உருளி குன்றிமணி ரகசியம் தெரியுமா?

ஸ்ரீ கிருஷ்ணன் குருவாயூரப்பனாக அருள்பாலிக்கும் குருவாயூர் திருக்கோயிலில், பெரிய உருளி ஒன்றில் குன்றிமணிகள் வைக்கப்பட்டிருக்கிறது.
குழ்ந்தை ஸ்ரீ கிருஷ்ணனை தரிசிக்க வரும் பக்தர்கள் அந்த உருளில் இரண்டு கைகளையும் விட்டு அந்த குன்றிமணிகளை அளைந்தபடி தங்களது வேண்டுதல்களை குருவாயூரப்பனிடம் வைக்கின்றனர். இந்த விசேஷ வழிபாட்டின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் கூறப்படுகிறது. அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
முன்னொரு காலத்தில் வயதான பெண்மணி ஒருவர் குருவாயூர் திருத்தலத்தில் இருந்து வெகு தொலைவில் வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் இஷ்ட தெய்வமாக குருவாயூரப்பனே இருந்தார். என்றாவது ஒருநாள் குருவாயூரப்பனை தரிசித்திட வேண்டும் என்பதுதான் அந்த மூதாட்டியின் வாழ்நாள் பிரார்த்தனையாக இருந்தது. குருவாயூரப்பனை எப்படியும் தரிசித்துவிடுவது முடிவெடுத்தாள் அந்த மூதாட்டி.
குருவாயூரப்பனை தரிசிக்கச் செல்லும்போது வெறுங்கையுடன் சென்றால் நன்றாகவா இருக்கும்? ஏதாவது ஒன்றை காணிக்கையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்தாள். பொன்னும் பொருளும் கொண்டு போக அவளிடம் வசதி இல்லை.
என்ன செய்வது என யோசித்தாள். தனது வீட்டில் நின்ற மஞ்சாடி குன்றிமணி மரத்திலிருந்து உதிரும் (குன்றிமணி) முத்துக்கள் கண்ணில் பட்டன. அவற்றை சேகரித்து சென்று குருவாயூரில் இருக்கும் பாலகனான பாலகிருஷ்ணனுக்கு அளித்து விடலாம் என்று மூதாட்டி முடிவு செய்தாள்.