அந்தரத்தில் நிற்கும் தூண் உள்ள சிவன் கோயில் தெரியுமா?
சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து தோன்றிய வீரபத்ரருக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிவன் சிலையும், உலகிலேயே பெரிய நந்தியும் இங்கு இருப்பது மிகவும் விசேஷம்.
இராமாயணத்தில் அசுரன் ராவணன், சீதா பிராட்டியை கடத்தி செல்லும்போது, ஜடாயு பறவை அவனை தடுத்ததாகவும் அப்போது ராவணன் அதை வெட்டி வீழ்த்தியதாகவும், பின்பு ஸ்ரீராமர் அந்தப் பறவையிடம் எழுந்திருக்கும்படி கூறியதாகவும் வரலாறு.
தெலுங்கில், ‘லெ’ என்றால் எழுந்திரு என்றும், பக்ஷி என்றால் பறவை என்றும் பொருளாகும். அதுவே இந்த ஊருக்கு லெபாக்ஷி என்ற பெயராகக் காரணமாயிற்று. இந்தக் கோயிலில் உள்ள 70 தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையில் படாமல் அந்தரத்தில் நிற்பது அதிசயமாகும். இதை உறுதி செய்ய பலரும் துணி மற்றும் பேப்பரை தூணுக்கு அடியில் நுழைத்து எடுக்கிறார்கள். இவ்வாறு செய்வதால், குடும்பத்தில் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஒரு சமயம், பிரிட்டிஷ் இஞ்சினியர் ஒருவர் இந்தத் தூணின் ரகசியத்தை தெரிந்து கொள்ள முற்பட்டு தோற்றுப்போனார். இந்தத் தூண் மட்டும் எப்படி அந்தரத்தில் நிற்கிறது என்பது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இந்தத் தூணை, ‘ஆகாய தூண்’ என்றும் அழைக்கிறார்கள். இந்தக் கோயிலை, ‘கூர்மசைலம்’ என்னும் மலை மீது கட்டியிருக்கிறார்கள். பார்க்க ஆமை போலவே இந்த மலை அமைந்திருப்பதால் இந்தப் பெயர் வந்தது.
இந்தக் கோயிலில் இருக்கும் நந்தி 20 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்டது. மற்ற கோயில்களில் உள்ள நந்தி சிலைகளை விட இந்த நந்தியின் தலை சற்று தூக்கிய வண்ணம் இருக்கும். இந்த நந்தி சிலைதான் உலகிலேயே இரண்டாவது பெரியதாகும். இது ஒற்றைக் கருங்கல்லால் ஆனது என்பது இன்னொரு சிறப்பு.