திருப்பதி கோயிலின் மொத்த சொத்து எத்தனை லட்சம் கோடி தெரியுமா?
நாட்டின் முக்கிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தை ஒப்பிடும் போது, திருமலை திருப்பதி சன்னதியில் உள்ள ஏழுமலையானின் நிகர மதிப்பு ஒரு ‘புதிய சாதனை’ படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
டாடா மோட்டார்ஸ், நெஸ்லே மற்றும் பஜாஜ் கபின்சர்வ் போன்ற முக்கிய நிறுவனங்களின் சந்தை மூலதனம் மற்றும் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற முக்கிய நிறுவனங்களின் மதிப்பு ரூ. 2.5 லட்சம் கோடி என கூறப்படுகிறது. அதே சமயம் திருப்பதி ஏழுமலையானின் சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடியை தொட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTI) வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாய்ஆகும்.
சச்சின் டெண்டுல்கரின் வருமானம் ரூ.1,300 கோடி. விராட் கோலி ஆண்டுக்கு ரூ 1,000 கோடி. ஆனால் திருப்பதியில் உள்ள ஏழுமலையானின் உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,400 கோடி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு பல வழிகளில் வருமானம் வருகிறது. அதில் மிக முக்கியமானது, பக்தர்கள் அளிக்கும் நேரடி காணிக்கை, மொட்டை அடிப்பதினால் முடியில் இருந்து கிடைக்கும் வருமானம், ஏழுமலையானின் வைப்புத்தொகையில் இருந்து கிடைக்கும் வட்டித் தொகை மற்றும் தேவஸ்தானம் நடத்தும் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தர்கள் நன்கொடையாக கொடுக்கும் நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் போன்றவை திருப்பதி கோவிலுக்கு கிடைக்கும் முக்கியமான வருமானங்கள் ஆகும்.
இந்நிலையில் திருப்பதி கோவிலின் செயல் அதிகாரி தர்மா ரெட்டி சமீபத்தில் ஏழுமலையானின் சொத்து விவரங்களை அறிவித்தார். அதில், “ஏழுமலையானின் பெயரில் 11,225 கிலோ தங்கம் பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. மூலவரின் தங்க ஆபரணங்கள் 1088.62 கிலோ எடையும் வெள்ளி ஆபரணங்கள் 9071.85 கிலோ எடையும் உள்ளன.
தேவஸ்தானத்தின் வரம்புக்குட்பட்ட 5,000 ஏக்கர் வன நிலம், 75 இடங்களில் உள்ள 7,636 ஏக்கர் சொத்துக்கள் ஆகியவை அசையா சொத்துகளாகும். 1,226 ஏக்கர் விவசாய நிலமாகவும், 5,409 ஏக்கர் விவசாயம் அல்லாத நிலமாகவும் உள்ளது. இந்தியா முழுவதும் 71 கோவில்கள் தேவஸ்தானத்துடன் இணைந்து இயங்கி வருகின்றன.
அத்துடன் சேர்த்து மேலும் 169 சொத்துக்களை குத்தகைக்கு வழங்க தேவஸ்தானம் பரிசீலித்து வருகிறது. டிடிடியில் 307இடங்களில் கல்யாண மண்டபங்கள் உள்ளன. இவற்றில் 29 அறநிலையத் துறைக்கும். 166 குத்தகைக்கு மற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்த குத்தகை மண்டபங்கள் மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு ஆண்டு வருமானம் ரூ.4 கோடி கிடைக்கும். ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம், தேவஸ்தானம் 97 மண்டபங்களை இயக்கி, பக்தர்களிடம் இருந்து 1,021 கோடி ரூபாய் நன்கொடை வசூலித்து வருகிறது.