இது தெரியுமா ? மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் …
பலருக்கும் சளி, இருமல் போன்றவை எளிதில் தொற்றிக் கொள்கின்றன. இத்தகைய சளி, இருமலுக்கு பலரும் பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எந்த ஒரு பலனும் இருந்திருக்காது. அப்படி வெளியே மருந்து கடைக்கு சென்று மருந்து வாங்கி உட்கொள்வதை விட்டு, நம் வீட்டின் உள்ளேயே இருக்கும் குட்டி மருந்துக் கடையான சமையலறைக்கு சென்று அங்குள்ள அற்புதமான சில பொருட்களைக் கொண்டே சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணத்தைக் காணலாம்.
அப்படி சளி மற்றும் இருமலுக்கு உடனடி நிவாரணம் தரக்கூடியது தான் சீரகம். இந்த சீரகத்தில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை அதிக அளவில் நிறைந்துள்ளது. மேலும் சீரகத்தில் உள்ள சத்துக்களால் காயமடைந்த தசைகள் ரிலாக்ஸாகும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடையும். இதனால் உடலில் உள்ள நோய்த்தொற்றுக்கள் விரைவில் குணமாகும்.
அதுமட்டுமின்றி, சீரகத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சளிக்கு உடனடி நிவாரணத்தைத் தரும். இப்போது சீரகத்தைக் கொண்டு எப்படி சளிக்கு உடனடி நிவாரணம் காண்பது என்று பார்ப்போம்.
* 2 கப் நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதில் சிறிது இஞ்சி மற்றும் துளசி இலைகளை தட்டி சேர்த்து வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடித்து வந்தால், சளிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
* சளியினால் மூக்கடைப்பு ஏற்பட்டிருந்தால், சீரகத்தை நீரில் போட்டு கொதிக்க விட்டு, அத்துடன் சிறிது கிராம்பையும் சேர்த்து கொதிக்க விட்டு, பின் அந்த நீரை ஆவி பிடித்தால், மூக்கடைப்பு நீங்கி, நிம்மதியாக மூச்சு விட முடியும்.
*சீரகத்தையும் மிளகையும் சமபங்கு எடுத்து பாலோடு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து வைத்திருந்து அரை மணி நேரம் கழித்து குளிக்க தலை அரிப்பு, பொடுகு, பேன் முதலியன ஒழியும்.
*ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் சுமார் 30 கிராம் சீரகத்தை பொடித்து போட்டு நன்றாக காய்ச்சி வடித்து வைத்துக் கொண்டு தலைக்கு தேய்த்து வைத்திருந்து சிறிது நேரங்கழித்து குளித்துவர தலை உஷ்ணம் (காலச்சூடு), உடற்சூடு (உள்அனல்), மேகத்தழும்பு (தோல்நோய்கள்) ஆகியன குணமாகும்.
*ஒரு ஸ்பூன் அளவு சீரகத்தைப் பொடித்து ஒரு வாழைப்பழத்தோடு சேர்த்து உறங்கப் போகும் முன் சாப்பிட நல்ல தூக்கம் வரும்.
*மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும். சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
*சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே வாரம் ஒருமுறை தடுப்பு முறையாகக் கூட இதைச் சாப்பிடலாம்.
*உடலுக்கு குளிர்ச்சியும் தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
*திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடியைச் சேர்த்து பருகினால் ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
*சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெய்யில் இட்டுக் காய்ச்சி அந்த எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் குளித்தால் கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.