இது தெரியுமா ? தினமும் நீர் மோர் குடித்து வருவதால்…
உணவருந்தும்போது இறுதியில் மோர் சாதம் சாப்பிட வேண்டும் என்று முன்னோர் வலியுறுத்தியதற்குக் காரணங்கள் பல. செரிமானப் பாதையில் உள்ள சிறு சிராய்ப்புகளையும் புண்களையும் ஆற்றும் தன்மை மோருக்கு உண்டு. உடலுக்கு நலம் தரக்கூடிய `புரோ-பயாடிக்’ நுண்ணுயிரிகளைத் தன்னகத்தே கொண்டு, வேனிற் காலத்தில் ஏற்படக்கூடிய வயிறு – குடல் சார்ந்த உபாதைகளை மோர் சீராக்குகிறது. செரிமானத்துக்கு உதவும் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. பெருங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி சேர்ந்த தாளித்த மோர், பல குடும்பங்களில் இன்றும் இடம்பெறும் அற்புதச் செரிமானப் பானம்.
மோரில் லாக்டிக் அமிலம் அதிக அளவு இருப்பதால் நோய்களுக்கு எதிராக போராட அது தயாராகி மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது . கால்சியம் சத்தை அதிகரித்து எலும்புகளை வலுவாக்குகிறது, ரத்த அழுத்தம் குறைகிறது,வாய்ப்புண் குணமடைகிறது, மேலும், மோர் அடிக்கடி பருக எடையை குறைக்கலாம். அதே சமயம் , நம் உடலுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கொண்டது.
கரிசாலை, கீழாநெல்லியை மோரில் கலந்து அருந்துவது காமாலை நோய்க்கான இயற்கை மருந்து.
நம் உண்ணும் உணவு பொருட்களில் சில சமயங்களில் காரம் அதிகமாக சேர்ந்து விடும். அப்படிப்பட்ட உணவினை நாம் உண்ணும் போது, வயிறு எரிச்சலில் அவதிப்பட்டு வருவோம். இதனை சரிசெய்ய ஒரு டம்ளர் மோர் குடித்தால் போதும்.
நாம் உண்ணும் உணவின் சக்தியை நம் உடலுக்கு முழுமையாக பெற்றுத்தர வைட்டமின் பி2 அவசியமாக தேவைப்படுகிறது. இந்த சத்தானது மோரில் அதிகம் இருக்கிறது. இது நம் வயிற்றில் உள்ள கல்லீரல் நன்றாக செயல்பட உதவி புரிகிறது. உடலில் தேவையற்ற நச்சுப் பொருட்களையும் வெளியேற்றி உள் உறுப்புகளை தூய்மைப்படுத்துகிறது. நம்மை அறியாமல் சாப்பிடும் உணவுப்பொருட்களில் ஏதாவது, நம் உடலுக்கு சேராத விஷத்தன்மை இருந்தாலும் கூட அதனை மோர் நீக்கிவிடுகிறது. இது தவிர தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலம் வைட்டமின் குறைபாடு சரி செய்யப்படுகிறது.
மாதவிடாய்க் காலங்களில் பனை வெல்லம் கலந்த மோரைப் பெண்கள் அருந்திவருவதால், மாதவிடாய்த் தொந்தரவுகள் குறையும்.
கால்சியம், பாஸ்பரஸ், ரிபோஃபுளோவின் போன்ற சத்துகள் மோரில் அதிக அளவில் இருப்பதால் எலும்பு, தசைகளின் வலிமைக்கும், நரம்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
அடிக்கடி தசைப்பிடிப்பால் அவதிப்படுபவர்களுக்கு மோர் சிறந்தது.
தோல் நோய் உள்ளவர்கள் அதிக அளவில் நீர்மோர் அருந்துவதால், நோய் விரைவில் குணமடையும்.
மோருடன் உப்பு கலந்து தினசரி குடித்து வந்தால் நீர்ச்சத்து குறைபாடு நம் உடலில் ஏற்படாது. மோரில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீர் சத்து அதிகமாக இருப்பதால் கோடை காலங்களில் உடலை வறட்சி நிலையிலிருந்து காக்கும்.
நம்மில் பலபேர் அசிடிட்டி வந்துவிட்டால் அசிடிட்டி டானிக்கை தான் தேடுவோம். ஆனால் நம் வீட்டிலேயே உள்ள வைத்தியம் தான் மோர் அசிடிட்டியை குணப்படுத்த மோர் தவிர, சிறந்த மருந்து வேறு எதுவும் இல்லை. ஒரு டம்ளர் மோருடன் மிளகு, சீரகம், இஞ்சி, கருவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து அரைத்து அந்த விருதினை சிறிது, மோரில் கலந்து குடித்தால் போதுமானது. அசிடிட்டி பிரச்சினை தீர்ந்துவிடும்.
வாய்ப் புண், வயிற்றுப் புண் உள்ளவர்கள், மணத்தக்காளி பழம் கலந்த மோரைக் குடித்துவரப் புண்கள் விரைவில் ஆறும்.
மோர் அருந்துவதால் குடற்புண், கண்ணெரிச்சல், கைகால் எரிச்சல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம்.
மது, புகையிலையால் உடலில் சேர்ந்திருக்கும் நஞ்சை வெளியேற்ற, தினமும் புதினா கலந்த மோர் குடிப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.
குளிர்ச்சிக்காக ஐஸ் கட்டிகளை மோரில் கலந்து குடிப்பதைத் தவிர்த்து, மண் பானைகளில் குளிரூட்டப்பட்ட மோரைப் பயன்படுத்தலாம். மோரின் குளுமையோடு பானையின் குளுமையும் சேர்வதால் வெப்பத்தைக் குறைக்கும் அற்புதமான பானமாகும். அலுவலகத்துக்குச் செல்வோர், பள்ளிக் குழந்தைகள், நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோர், புட்டிகளில் நீருக்குப் பதிலாக நீர்மோரையே தாகம் தணிக்க எடுத்துச் செல்லலாம். மாலை வேளைகளில் டீ, காபிக்குப் பதிலாகச் சீரக மோரைப் பருகலாம். வெயில் காலங்களில் உண்டாகும் நீரிழப்பை ஈடுசெய்வதில் மோருக்கு முக்கியப் பங்குண்டு. தாகத்தை நிவர்த்தி செய்து, சிறுநீர் பெருக்கியாக மோர் செயல்படுகிறது.