இது தெரியுமா ? மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்…
கீரை வகைகள் அனைத்தும் உடல்நலத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. சில கீரைகள் மருத்துவ மூலிகையாகவும் பயன்படுகின்றன. இப்படி பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு கீரையாக “மணத்தக்காளி கீரை” உள்ளது. மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
அத்தியாவசிய சத்துகள்:
நமது உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின்கள் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. இந்த சத்துக்கள் அனைத்தும் மணத்தக்காளி கீரையில் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. மணத்தக்காளி கீரையை வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
உடல் வெப்பம்:
உடல் சூட்டை தணிக்க நினைப்பவர்கள் மணத்தக்காளி கீரையை சமைத்து சாப்பிட்டு வர, உடல் சூடு தணியும்.
தொண்டை கட்டு:
தொண்டை கட்டு, வீக்கம் மற்றும் தொண்டை புண் உள்ளவர்களுக்கு இந்த கீரை விரைவில் நிவாரணம் அளிக்கும். எனவே வாரம் இரண்டு முறை இந்த கீரையை உணவில் சேர்த்து வந்தால், தொண்டை கட்டு, வீக்கம் மற்றும் தொண்டை புண் ஏற்படுவதைத் தடுக்கலாம்.
வயிற்று புண்கள்:
சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருப்பதாலும், அதிக காரம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும் வயிற்றின் குடல் பகுதிகளில் புண்கள் ஏற்படுகிறது. வயிற்றுபுண் உள்ளவர்கள், மணத்தக்காளி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுபுண் மட்டுமின்றி, வாய்ப்புண்ணும் குணமாகும். ஏனெனில் வயிற்றுபுண் உள்ளவர்களுக்கு வாய்ப்புண்ணும் இருக்கும்.
காசநோய்:
காசநோய் என்பது நுரையீரலை பாதித்து சுவாசிக்கும் போது மூச்சுத்திணறல், வறட்டு இருமல் போன்றவற்றை ஏற்படுத்தும். காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணத்தக்காளி கீரை மற்றும் அதன் பழங்களை தினமும் சிறிதளவு சாப்பிடுவது நல்லது.
கருத்தரித்தல்:
உடனே கருத்தரிக்க வேண்டும் என்று நினைக்கும் புதுமணத் தம்பதியர்கள் தங்கள் உணவில் வாரம் இரண்டு அல்லது மூன்று முறையாவது மணத்தக்காளி கீரையை பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால், அவர்களின் கருப்பை பலம் பெரும். சீக்கிரம் கருத்தரிக்கும் நிலையை உண்டாக்கும்.
வலிமையான விந்தணு:
ஆண்கள் பலருக்கு அவர்களின் உயிரணுக்கள் வலிமையின்றி இருப்பது குழந்தை பிறக்காத நிலை ஏற்பட காரணமாக அமைகிறது. ஆண்கள் மணத்தக்காளி கீரையை அவ்வப்போது சாப்பிட்டு வந்தால், அவர்களின் விந்தணு வலிமையுடன் இருக்கும்.
கல்லீரல்:
மஞ்சள் காமாலையினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்பு மற்றும் இதர கல்லீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைக் காண மணத்தக்காளி செடியின் இலைகளை தண்ணீரில் வேக வைத்து அருந்துவது பெரிதும் உதவியாக இருக்கும்.
சிறுநீரகம்:
குறைந்த அளவில் நீரை அருந்தவதாலும், உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதாலும், சரியாக சிறுநீர் கழிக்காமல் இருப்பதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலை ஏற்படுகிறது.
மணத்தக்காளி கீரையை தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்களில் கற்கள் உருவாகியிருந்தால் அது கரையும். சிறுநீரை பெருக்கி, உடலில் சேர்ந்திருக்கும் நச்சுகளை சிறுநீர் வழியாக வெளியேற்றும்.
சருமம்:
சருமத்தில் அலர்ஜி, வெயில் கட்டி போன்றவை இருந்தால், அந்த இடத்தில் மணத்தக்காளியின் சாற்றினை தடவினால், விரைவில் குணமாகும்.