இது தெரியுமா ? மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம்…
வாழையில் பல வகைகள் இருந்தாலும், அதன் அனைத்து பாகங்களுமே நமக்கு நிறைய பயன்களை அள்ளித் தருகின்றன.
ஹோர்மோன்களை ஊக்குவிக்கும் வாழைப்பழம்.
ஒரு சாதாரணப் பழவகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் அதன் மருத்துவ குணங்கள் அதிசயிக்க வைக்கின்றன.
வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி6 ஆனது டிரைப்டோபெனாக மாற்றப்படுகிறது. டிரைப்டோபென் சீரோடோனினாக மாற்றமடைகிறது. இது நமக்கு சாந்த குணத்தை தோற்றுவிக்கிறது. டிரைப்டோபென் பின்னர் நியாசினாக மாற்றம் அடைகிறது. உடலில் உள்ள ஹோர்மோன் குறைபாடுகளை நிவர்த்தி செய்கிறது.
வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது.
நம்முடைய உடலில் சுரக்க கூடிய திரவத்தை சமநிலைப்படுத்துகிறது. உடம்பில் உள்ள செல்களை தூய்மையாகவும் நல்ல ஊட்டச்சத்துடனும் வைத்து கொள்கிறது.
வாழைப்பழத்தில் காணப்படும் நார்ச்சத்துகள் குடலை சீராக வைக்கிறது. வாழைப்பழத்துடன் பால் கலந்து சாப்பிட்டாலோ அல்லது தேன் கலந்து சாப்பிட்டாலோ அவை வயிற்று சம்பந்தமான நோய்களை குறைக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்கும் வைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.
வாழைப்பழத்தை நம்முடைய உணவின் ஒரு பகுதியாக சாப்பிட்டு வந்தால் பக்கவாதத்தால் ஏற்படும் இறப்பு சதவீதம் 40 சதவீதம் குறையும் என்று ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ளது. வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக்(Natural Sugar) கொண்டுள்ளது. அதாவது சுக்ரோஸ்(Sucrose), பிரக்டோஸ்(Fructose) மற்றும் குளுக்கோஸ்(Glucose) உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும்(Fiber) கொண்டுள்ளது.
இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 1 1/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை கொடுப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம் உடலில் தினமும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மூளை வலிமை(Brain Power): வாழைப்பழத்தை உணவுடன் சேர்த்து கொடுத்து சோதனை செய்து பார்த்தபோது மூளைத்திறன் அதிகரித்ததோடு பொட்டாசியம் நிறைந்த இந்த உணவு அதிகமான கல்வித்திறனை அளிப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழையின் ஒவ்வொரு பாகமுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. நெஞ்செரிக்கும் போது ஒரு பழம் சாப்பிட்டால் எரிச்சல் நீங்கி விடும். இதன் காரத்தன்மை நெஞ்செரிச்சலை உருவாக்கும் அமிலத்தைச் சமன் செய்து நிவாரணம் அளிக்கிறது.
கர்ப்பிணிகள் வாழைப்பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புரட்டலை தடுக்கும். இதிலுள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து வாந்தியைத் தடுக்கிறது. நார்ச்சத்து அதிகம் என்பதால் மலச்சிக்கலைத் தடுக்கும்.
இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் சிவப்பணுக்கள் குறைபடும் இரத்த சோகைக்கும் அருமருந்தாய் அமைகிறது வாழைப்பழம்.
குடிபோதையை நீக்க சிறந்தது. இதனை மில்க்ஷேக் செய்து தேன் கலந்து பருகினால் வயிற்றைச் சுத்தம் செய்து உடலுக்கு சக்தியைக் கொடுக்கும். உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சாப்பிடச் சொல்வார்கள்.
இதில் சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்தக்காரர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. கால்களில் ஆடுசதையில் சட்டென்று பிடித்திழுக்கும். இது பொட்டாசியம் குறைவால் வருகிறது. தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் இதைத் தடுக்கலாம்.
வாழை இலை பயன்கள்:
* வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.
* தளிரான வாழை இலையை நெருப்பினால் ஏற்பட்ட புண், வெந்நீர் பட்டதால் உண்டான புண் ஆகியவற்றில் வைத்துக் கட்ட அந்த புண்கள் உலர்ந்து விடும். அப்போது, முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
* புண்களுக்கு துணியில் எண்ணெய் நனைத்து வைத்து கட்டும்போது, அதன் மேல் வாழை இலையையும் வைத்து கட்டி வர, அந்த துணி எண்ணெய் தன்மையுடனேயே இருக்கும். அதனால் புண் விரைவில் ஆறிவிடும்.
வாழைப்பூ பயன்கள்:
* வாழைப்பூவில் வைட்டமின் பி அதிகம் உள்ளது. இந்த பூவை அடிக்கடி சமைத்து உட்கொண்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்றுவலி மற்றும் குடல்புண், ரத்தபேதி, மூல நோய் ஆகியவை குணமாகும்.
* கை, கால் எரிச்சலுக்கு வாழைப்பூவை இடித்து, அதில் விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் ஒற்றடமிட்டு கட்டலாம்.
* இதன் பூவை இடித்து சாறு பிழிந்து, அதில் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து குடித்து வந்தால் வெள்ளைப்படுதல், பெரும்பாடு, வயிற்றுக்கடுப்பு போன்றவை நீங்கும்.
* வாழைப்பூ சாற்றுடன் கடுக்காய் பொடி சேர்த்து குடிக்க மூல நோய் குணமாகும்.
* வாழைப்பூவின் நரம்பை நீக்கிவிட்டு, அதை ஒரு பாத்திரத்தில் இட்டு அவித்து, பின்னர் சாறு பிழிந்து, அந்த சாற்றை குடிக்க சீதபேதி, கழிச்சல் போன்றவை குணமாகும்.
* வாழைப்பூவை வேக வைத்தோ அல்லது பொரியல் செய்தோ அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் இருந்தாலும் தீரும்.
வாழைத்தண்டு பயன்கள்:
* வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரை பெருக்கும் தன்மை உண்டு. எனவே, இதை நீர்ச் சுருக்கு, எரிச்சல் போன்றவை தீர அருந்தி வரலாம். மேலும், இது தேவையற்ற உடல் பருமனையும் குறைக்கும்.
வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறி விடும்.
* வாழைத்தண்டை சுட்டு, அதன் சாம்பலை தேங்காய் எண்ணெயில் கலந்து பூசிவர தீப்புண், காயங்கள் ஆறும்.
* இதன் தண்டை உலர்த்தி பொடியாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். மேலும், கல்லீரல் வலுவடையும்.
* வாழைப்பட்டையை தீயில் வாட்டி சாறு பிழிந்து, அதில் ஓரிரு துளி காதில் விட காது வலி நீங்கும்.
வாழை பிஞ்சு-காயின் பயன்கள் :
* வாழை பிஞ்சினால் ரத்த மூலம், ரத்த கடுப்பு, வயிற்றுப்புண், நீரிழிவு நோய் ஆகியவை குணமாகும்.
* வாழைக்காயினால் கழிச்சல், உமிழ்நீர் அதிகம் சுரத்தல், வயிறுளைச்சல், உடல் வெப்பம், இருமல் ஆகியவை தணியும். உடலில் ரத்தப் பெருக்கையும், வன்மையையும் இது உண்டாக்கும்.
வாழைப்பழம் பயன்கள் :
* வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, பி, பி2, சி மற்றும் சுண்ணாம்புச்சத்து ஆகியவை உள்ளன. உணவை எளிதில் சீரணிக்க செய்யும் வாழைப்பழம் பித்தத்தை நீக்கக்கூடியதும் கூட. மேலும், உடலில் ரத்தத்தை அதிகரிக்கவும் செய்யும்.
* தினம் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* பெண்கள் அடிக்கடி வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மாதவிலக்கு சீராக வரும்.
* அடிக்கடி வாழைப்பழம் சாப்பிடுபவர்களுக்கு குடல் புண்கள் வராது. இருந்தால் ஆறிவிடும். மேலும், தோல் பளபளக்கும்.
* வாழைப்பழத்துடன் ஏலக்காய் பொடி சேர்த்து பிசைந்து சாப்பிட பெரும்பாடு குணமாகும்.
* வாழைப்பழத்துடன் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர ரத்த மூலம் குணமாகும்.
* வாழைப்பழம் அடிக்கடி சாப்பிடுவது அறிவை விருத்தியடையச் செய்யும்.
செவ்வாழை குருதியை அதிகரிக்கும். மலை வாழைப்பழம் மலச்சிக்கலை போக்கும். பேயன் வாழைப்பழம் அம்மை நோயை குணமாக்கும். பச்சை வாழை உடம்புக்கு குளிர்ச்சி தரும். நேந்திரம் பழம் சருமத்தை பளபளப்பாக்கும். மொந்தன் வாழை உடல் வறட்சியை போக்கும். நாட்டு வாழைப்பழம் குடல் புண்ணை ஆற்றும்.