இது தெரியுமா ? தொண்டை புண்ணை குணமாக்கும் பூண்டு..!
பூண்டின் மணமே நோய் எதிர்ப்பு சக்தியை தரும் என்பதால் அதனை வீட்டின் முன்னால் கட்டி தொங்கவிடும் பழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது.
பூண்டு பற்களை மாலையாக கட்டி அணியும் பழக்கம் பல பழங்குடி இனத்தவரிடம் காணப்பட்டதை வரலாற்றில் அறிய முடிகிறது.
பூண்டுவை பிழிந்து கிடைக்கும் எண்ணெய் பசையுடன் காரத்தன்மை கொண்டது.
அது வெப்பத்தை ஊடுருவி கடத்தும் இயல்புடையது. கபம் (குளிர்ச்சி), வாதம் (காற்று) ஆகிய தன்மைகள் மனித உடலில் அதிகரிக்கும்போது, அவர்களுக்கு பூண்டு சிறந்த மருந்தாகின்றது.
பூண்டில் ஒருவித மணம் வீசும். அலிசின் என்ற கந்தக வேதிப்பொருள் பூண்டில் இருப்பதால் அத்தகைய மணம் வீசுகிறது. அதுதான் நோய் தொற்றுக்களை தீர்க்க உதவுகிறது.
பூண்டில் இருக்கும் கந்தக சத்துக்களே அதன் சிறப்புக்கு காரணம். பொட்டாசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலீனியம் போன்ற தாதுக்களும், வைட்டமின் சத்துக்களும் அதில் நிறைந்திருக்கிறது.
நல்ல உடற்கட்டு, குரல் வளம், தீர்க்கமான பார்வை, ஆண்மை சத்து, எலும்புகளுக்கு உறுதி போன்றவைகளை பூண்டு தருகிறது. நோய்த் தடுப்பாற்றலையும் அதிகரிக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், இதயத்தில் உள்ள ரத்தக்குழாய் அடைப்புகளை சீர்படுத்துதல், கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்துதல் போன்றவைகளை பூண்டு செய்கிறது. மூட்டுவலி, பெண்களுக்கு இடுப்பு பகுதியில் ஏற்படும் எலும்பு தேய் மானம், எலும்பு சிதைவு, சுவாசநோய்கள் மற்றும் சிலவித நரம்பு பலகீன நோய்களுக்கும் பூண்டு மருந்தாகிறது.
பூண்டு ஒன்றை அரைத்து, மெல்லிய துணியில் கட்டி, அதை தீயில் காட்டி பிழிந்தால் சாறு வரும். அத்துடன் தேன் கலந்து தொண்டை பகுதியில் தடவி வந்தால் தொண்டை வீக்கம் குறையும். தொண்டை புண்கள் ஆறும். சித்த மருத்துவத்தில் காது வலி, வயிற்று வலி, சுவாச நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பூண்டு சேர்க்கப்படுகிறது.
பிரசவித்த பெண்கள் பாலில் பூண்டுவை போட்டு கொதிக்கவைத்து சாப்பிட்டால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது. தாய்ப்பாலும் பெருகும்.
பூண்டு ரத்தத்தின் அடர்த்தியை குறைக்கும் தன்மை கொண்டது. அதனால் இதய நோய்களுக்கான மருந்து சாப்பிடுபவர்கள் பூண்டுவை அதிகம் சாப்பிடக்கூடாது. மாதவிடாய் உதிரப்போக்கு அதிகரிக்கும் காலங்களிலும் பெண்கள் பூண்டுவை அதிகம் பயன்படுத்தக்கூடாது.
பூண்டுவில் இருந்து வெளியேறும் கந்தக மணம் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. கீரையுடனோ, பாலுடனோ பூண்டை கலந்து சாப்பிட்டால் அந்த மணம் கட்டுப்பட்டுவிடும். அந்த மணம் கட்டுப்பட கீரையில் உள்ள பச்சையமும், பாலில் உள்ள புரதங்களும் காரணமாக இருக்கின்றன