இது தெரியுமா ? கல்வி பயலும் மாணவர்கள் இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்..!
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை என்கிற ஊரில் ஆனைமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது அருள்மிகு யோக நரசிம்மர் கோவில்.
இக்கோவில் ஒரு தொன்மையான குடைவரை கோவிலாகும். ஒத்தக்கடை யோகநரசிம்மர் திருக்கோவில் மிகவும் பழமையான கோவிலாகும். குடைவரை கோவில்களை கட்டுவதில் கைதேர்ந்த பல்லவர்கள் இக்கோவிலை கட்டியதாகவும், பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பலர் இக்கோவிலை நன்கு பராமரித்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. இக்கோவிலின் இறைவனாக ஸ்ரீ யோக நரசிம்மரும், இறைவியாக நரசிங்கவல்லி தாயாரும் அருள்பாலிக்கின்றனர். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரும் நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த ஒத்தக்கடை யோக நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
ரோமச முனிவர் தனக்கு புத்திர பாக்கியம் கிடைக்க வேண்டி, இக்கோவிலின் சக்கர தீர்த்த குளத்தில் நீராடி யாகம் செய்ததாக தல புராணங்களில் கூறப்பட்டுள்ளது. அப்போது ரோமச முனிவர் நரசிம்ம மூர்த்தியை அவரின் அவதார ரூபத்தில் தரிசிக்க எண்ணினார். அவரின் ஆசைக்கிணங்க மகாவிஷ்ணு உக்கிரமான நரசிம்மர் ரூபத்திலேயே காட்சி தந்தார் நரசிம்ம மூர்த்தி. நரசிம்மரின் உக்கிரத்தால் வெளிப்பட்ட வெப்பம் அனைத்து லோகங்களையும் அழித்து விடுமோ என்று அஞ்சிய தேவர்கள், மகாலட்சுமியிடம் முறையிட, லட்சுமி தாயார் வந்து நரசிம்மரை அரவணைத்ததும் அவரின் உக்கிரம் தணிந்து, யோக நரசிம்மராக காட்சியளித்து ரோமச முனிவர் வேண்டிய வரத்தை அளித்து ஆசிர்வதித்தார்.