இது தெரியுமா ? காந்தாரியின் சாபத்தால் அழிந்த யாதவ குலம்..!

குருஷேத்திரப் போர் முடிவடைந்தது. அந்தப் போரில் கவுரவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். புத்திரர்களை இழந்ததால், மிகவும் மனம் உடைந்து போயிருந்தாள் கவுரவர்களின் அன்னையான காந்தாரி
. ஆகவே, அவள் எப்போதும் அழுது கொண்டும், புலம்பிக் கொண்டும், சந்தோஷமின்றி இருந்தாள். அவள் நிலையைத் தாங்க முடியாத எல்லாரும் கிருஷ்ணனிடம் வந்து காந்தாரிக்கு ஆறுதல் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டனர்.
கிருஷ்ணன் சொல்லும் வார்த்தைகளால் காந்தாரி தேறுவாள் என்று நம்பினர். எனவே, கிருஷ்ணன் காந்தாரியைக் காணச் சென்றான்
. கிருஷ்ணன் வந்திருக்கிறான் என்பதை கேள்விப்பட்ட காந்தாரி பொங்கி எழுந்தாள். கிருஷ்ணன் பேச ஆரம்பிப்பதற்குள் காந்தாரியே பேசினாள். அந்தப் பேச்சு பெருங்கோபத்தில் உருவெடுத்த சாபமாகவே இருந்தது.
“”மகாபாரத யுத்தம் வருவதற்குக் காரணமாக இருந்தவன் நீ. நீ நினைத்திருந்தால் இந்த யுத்தமே வராமல் தடுத்திருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. ஆகையால் நான் உன்னைச் சபிக்கிறேன்.
“”என்னுடைய உற்றார், உறவினர்கள் அனைவரும் அழிந்து போக காரணமாக இருந்தவன் நீ. அதேபோல் உன்னாலேயே உன்னுடைய உற்றார், உறவினர்கள் அனைவரும் அழிந்து போவர்.
இன்னும் முப்பத்தியாறு ஆண்டுகளுக்குப் பிறகு உன் வம்சம் என்று சொல்லிக் கொள்ள எதுவுமே இருக்காது.
“”உன்னுடைய மரணம் கேவலமான மரணமாக அமையட்டும். இன்று கவுரவர் குலத்துப் பெண்கள் அழுது, அழுது அழிந்து போனதைப் போல, உன்னுடைய யாதவ குலப் பெண்களும் அழுது, அழுது அழிந்தே போவார்கள்!” என்றாள்.
கூடியிருந்தவர்கள் திடுக்கிட்டுப் போயினர். “காந்தாரி பத்தினி. கணவனைக் கூடப் பார்க்காமல் கண் திரையிட்டுக் கற்புக்கரசியாக வாழ்ந்தவள். அவள் சாபம் பொய்க்காதே!’ என்று கலங்கினர்.
ஆனால், கிருஷ்ணன் இதைக் கேட்டும் திடுக்கிடவில்லை; நிதானம் இழக்கவில்லை.
அவன் புன்முறுவலுடன், மிருதுவான குரலில் கூறினான்.
“”தாங்கள் என் காரியத்தை மிகவும் சுலபமாக்கி விட்டீர்கள். யாதவர்கள் எப்போது, எப்படி அழிவார்கள் என்பது எனக்கு ஏற்கனவே தெரிந்த விஷயம்தான்.
ஆகவே, நான் தங்கள் சாபத்தால் வருந்தவில்லை. எனக்கு அதனால் தங்கள் மேல் எந்தக் கோபமும் இல்லை.
“”யாதவர்களை என்னைத் தவிர வேறு எவராலும் அழிக்க முடியாது என்பது தான் உண்மையான வார்த்தை.
அவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு செத்துப் போவார்கள் என்பது விதிக்கப்பட்ட விதி. அதுதான் தங்கள் நாவிலிருந்து சாபமாக வந்திருக்கிறது!” என்றான்.
அதன்பின் முப்பத்தியாறு வருடங்களுக்கு பிறகு, யாதவர்களுக்குள் பாரதப் போரைப் பற்றிப் பெரியதொரு வாக்குவாதம் உண்டாயிற்று.
அப்போது யாதவர்கள் அனைவரும் நன்றாகக் குடித்திருந்தனர். போதை தலைக்கேறி இருந்தது.
பாரதப் போரில் கலந்து கொண்ட சாத்யகி கிருதவர்மாவிடம் வாக்குவாதம் செய்தான். வாக்கு வாதம் பெரிதாக அடிதடியாக மாறிப் போனதும்.
யாதவர்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்தனர். அதன் பின் அவர்கள் ஒருவரை ஒருவர் கையில் கிடைத்த ஆயுதங்களால் தாக்கினர்.
பாரதப் போரின்போது சாத்யகி பாண்டவர்கள் பக்கமாக இருந்து போரிட்டவன். கிருதவர்மா கவுரவர்கள் பக்கமாக இருந்து போரிட்டவன்.
எனவே, மீண்டும் ஒரு பாண்டவ கவுரவப் போர் போல அப்போர் நிகழ்ந்தது. இறுதியில், அத்தனைப் பேரும் செத்துப் போயினர்.
விஷயத்தைக் கேள்விப்பட்டு அமைதியான மனநிலைமையுடன் கிருஷ்ணன் சம்பவ இடத்தை வந்து பார்வையிட்டான். அங்கே சாத்யகி ஒருபுறம் செத்துக் கிடந்தான்.
கிருஷ்ணனின் மகனான ப்ரத்யும்னன் ஒரு பக்கம் செத்துக் கிடந்தான். எல்லாரையும் சாகடித்து விட்டு, நூறு இருநூறு பேர் கொண்ட கும்பல், ஒன்று சந்தோஷமாக குடித்துக் கொண்டிருந்தது.
இதைக் கேட்ட கிருஷ்ணன் பெரிதும் ஆத்திரமடைந்தான். அந்தக் கும்பலை நோக்கி நடந்து சென்றான். அவர்களை வெறும் கைகளாலே குத்துக்கள் விட்டும், அடித்தும், மிதித்தும், துவைத்தும் கொன்றான். அவன் இன மக்கள் அவனாலேயே அழிந்தனர்.
இந்தப் போராட்டத்தில் கிருஷ்ணனின் எல்லாப் பிள்ளைகளுமே செத்துப் போயினர். கடைசியாக மிஞ்சியது இரண்டு யாதவர்கள். அவர்கள் கிருஷ்ணனை இடைவிடாமல் துதித்து அவன் குரூரத்தைச் சாந்தி செய்தனர்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? காந்தாரியின் சாபமா? இல்லை குடி. கிருஷ்ணன், குடிக்கக் கூடாது என்று யாதவர்களுக்குப் படித்து, படித்துச் சொல்லியிருந்தான்.
ஆனால், கிருஷ்ணனின் பேச்சை எவரும் கேட்கவில்லை. எப்போதும் குடியில் மூழ்கினர்.
குடி குடியைக் கெடுக்கும். குடி நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்று அரசாங்கம் இன்று அறிவிப்புச் செய்ததை அன்றே நடைமுறைப்படுத்தினான் கிருஷ்ணன்.
இன்று அறிவிலிகள் பலரும் கள்ளத் தனமாகக் குடித்து விட்டுச் சாவதைப் போல், அன்றும் கிருஷ்ணனுக்குத் தெரியாமல் கள்ளத்தனமாகக் குடித்தனர். அடித்துக் கொண்டனர்; அழிந்து போயினர்.
ஆகையினால் எப்போதுமே ஒரு மனிதன் குடிக்கக் கூடாது. குடிக்காதே, குடி குடியைக் கெடுக்கும்.