இது தெரியுமா ? வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?

தமிழகத்தில் ஒரே கட்டமாக அனைத்து தொகுதிகளிலும் நாடாளுமன்றத்தின் மக்களவைக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் இதற்காக தீவிரமான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், வாக்கு சாவடியில் வாக்காளர்கள் தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வாக்காளர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது.

ஆதார் அட்டை,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை,

புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்,

தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை,

ஓட்டுநர் உரிமம்,

வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை (PAN Card),

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை,

இந்திய கடவுச்சீட்டு,

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,

மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,

பாரளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை,
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை.

வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக புகைப்பட வாக்காளர் சீட்டுக்கு பதிலாக வாக்காளர் தகவல் சீட்டினை அச்சிட்டு வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச் சாவடியின் பெயர், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப் பதிவு நாளுக்கு ஐந்து (5) நாட்களுக்கு முன்னர் அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும். வாக்குச் சாவடியில் வாக்காளர் தகவல் சீட்டு அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படாது.

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச் சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச் சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார்” என்று தெளிவுபடுத்தப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 20A-ஆம் பிரிவின்கீழ் பதிவு பெற்றுள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களின் கடவுச்சீட்டிலுள்ள விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களின் அசல் கடவுச்சீட்டின் அடிப்படையில் மட்டுமே (வேறெந்த அடையாள ஆவணமும் அல்லாது) அவர்களின் அடையாளம் வாக்குச்சாவடியில் மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *