இது தெரியுமா ? வைகுண்ட ஏகாதசி அன்று ஏன் பரமபதம் விளையாடுகிறார்கள்?
பரமபதம் விளையாடுவது வைகுண்ட ஏகாதசியன்று ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது.விளையாட்டின் ஏணி வழியே ஏறிச்சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வரநேரிடும்.
ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம். வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர்.
பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு இது!
ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று- ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றச் செய்ய வேண்டும்.
இந்த ஒன்றுதல், அவனோடு என்றுமே ஒன்றுவதாக உருப்பெறும் என்பது தான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபத வாசல் திறப்பும், வைகுண்ட ஏகாதசித் திருநாளும்!