அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால் என்னவாகும் தெரியுமா? அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

இன்றைய துரிதமான உலகில் உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் போன்றவை மோசமானதாக இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றுவதில்லை. ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது என்று பல தவறுகளை செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் கார்பனேடட் பானங்கள் அல்லது காஃபின் பானங்கள் போன்றவற்றை அருந்துகின்றனர். இது தங்களுக்கு உடனடி ஆற்றலை தருவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது நன்மையை தராது.

கார்பனேடட் பானங்களை அருந்துவதன் மூலமாக நம் உடலில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.

அதிக காஃபின் கொண்ட பானம் ஒன்றை அருந்தும்போது அதன் பாதிப்புகள் சில நிமிடங்கள் தொடங்கி, பல நாட்கள் வரையிலும் கூட நீடிக்கும். சராசரியாக ஒரு 500 மில்லி கொண்ட குளிர்பானத்தில் 160-200 mg அளவில் காஃபின் அளவு இருக்கும். இது நாம் அருந்துகின்ற ஒரு கப் காஃபியை காட்டிலும் கூடுதலாகும்.

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். பானம் அருந்திய அடுத்த 15 முதல் 45 நிமிடங்களில் ரத்த நாளங்களில் காஃபின் அளவு மிகுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் நம்முடைய எச்சரிக்கை உணர்வு மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

பானம் அருந்திய 30 முதல் 50 நிமிடங்களுக்குப் பிறகு நமது ரத்த நாளங்கள் காஃபினை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால் நம்முடைய ரத்த நாளங்களில் சர்க்கரை மிகுதியாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காஃபின் அளவுகள் குறையும் என்றாலும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பது மறையாது.

தோராயமாக காஃபின் பானம் அருந்திய 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, நமது உடல் அதில் பாதி அளவை மட்டுமே வெளியேற்றியிருக்கும். எனினும், நம்முடைய வயது மற்றும் உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையில் இது மாறும். இறுதியாக 12 மணி நேர முடிவில் காஃபின் தன்மை உடலில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்.

காஃபின் பானம் அருந்திய பிறகு 12 முதல் 24 மணி நேர இடைவெளிக்குள் உங்களுக்கு தலைவலி, எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாகலாம். காஃபின் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்குவதற்கு தோராயமாக 7 முதல் 12 நாட்கள் ஆகலாம். ஆக, அடுத்தமுறை காஃபின் பானம் அருந்துகின்ற எண்ணம் தோன்றும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *