இரவு சரியாக தூங்காமல் இருந்தால் என்னென்ன பிரச்சனைகள் வரும் தெரியுமா..?
தற்காலத்தில் பலரும் தூக்கமின்றி அவதிப்படுகிறார்கள். பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் என வயது வித்தியாசமின்றி பலரும் தூக்கமின்மை மற்றும் சரியான ஸ்லீப்பிங் சைக்கிள்ஸ் இல்லாதது என தூக்கம் சார்ந்த பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர்.
நம் சிறுபிள்ளைகளாக இருந்த காலத்தில் சூரிய உதயத்தை பார்த்து மற்றும் கோழி போன்ற விலங்குகளின் ஒலியை கேட்டு தான் காலை தூங்கி எழுவோம். ஆனால் தற்போதோ காலை எழுவதே தாமதமாகத்தான் எழுகிறோம். அப்படி எழுவதற்கு கூட மொபைல் அலாரம்களை பயன்படுத்துகிறோம். குறிப்பாக கார்ப்பரேட் துறையில் வேலை பார்க்கும் பலருக்கும் நள்ளிரவு தாண்டியும் வேலை பார்க்கும் சூழல் நிலவுகிற்து.
இதனால் இந்த துறையில் வேலை பார்ப்போரின் தூக்க சுழற்சி முற்றிலும் மாறி வழக்கமான தூக்கம் பாதிக்கப்படுகிறது. குருகிராமில் இருக்கும் மணிப்பால் மருத்துவமனையை சேர்ந்த சீனியர் கன்சல்டன்ட் – நியூரோ சர்ஜரி டாக்டர்.நிஷாந்த் ஷங்கர் யாக்னிக் பேசுகையில், சீரற்ற தூக்க சுழற்சியின் காரணமாக பலரும் தலை பாரம் மற்றும் வலி, கண்கள் சிவப்பாக இருத்தல் மற்றும் கண் இமைகளை தன்னிச்சையாக, அசாதாரணமாக சிமிட்டுவது, தசை வலிகள், கைகால்களில் குத்துவது போன்ற உணர்வு என பல அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள்.
இது போன்ற பிரச்சனைகளுடன் வருவோருக்கு பிரெயின் மற்றும் லிம்ப் (limb) ஸ்கேன் எடுத்து பார்த்தால் ரிசல்ட் நார்மலாக இருக்கும். ஆனால் இவர்கள் தொடர்ச்சியாக அனுபவிக்கும் இது போன்ற அறிகுறிகள் என்பவை சரியான தூக்க முறைகளை பின்பற்றாததால் எழுவதாக இருக்கின்றன. இந்த வகையில் தூக்கமின்மை மற்றும் தூக்கச் முறையற்ற சுழற்சிகள் நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை புரிந்துகொள்வது, நரம்பியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த நோயாளிகளுக்கு வழிகாட்டுவதில் முக்கியமானதாக இருக்கிறது என்றார்.
இயல்பாக தூங்க முடியாமல் சிலர் ஏன் அவதிப்படுகிறார்கள்.?
இருட்டில் டிஜிட்டல் ஸ்கிரீன்களை நீண்ட நேரம் பார்த்து பயன்படுத்துவது வரும் தூக்கத்தை கூட சீர்குலைத்து, ஸ்லீப்-வேக் சுழற்சிகளை ஒழுங்குப்படுத்தும் உடலின் திறனை பாதிக்கிறது.
தூங்குவதற்கு முன் பிரஷ் செய்வது போன்ற சில பழக்கங்களை கடைபிடிக்காமல் இருப்பது, தூங்குவதற்கு இன்னும் நேரம் ஆகவில்லை என தவறாக உடலுக்கு உணர்த்தலாம்.
தூங்க செல்வதற்கு சில மணி நேரங்கள் முன் காபி அல்லது டீ குடிப்பது தூக்கத்தில் குறுக்கிடலாம், இது மோசமான தூக்க நேரம் மற்றும் தரத்திற்கு வழிவகுக்கும்.
நீண்ட நாட்களாக சரியாக தூங்காமல் இருப்பதால் ஏற்படும் விளைவுகள் கீழே…
பல நாட்கள் ஒழுங்காக தூங்காமல் இருப்பது மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற மனநிலை சிக்கல்களை ஏற்படுத்தி மனஉளைச்சலை ஏற்படுத்த கூடும். போதுமான தூக்கம் இல்லாதபோது உடலின் ஸ்ட்ரஸ் ரெஸ்பான்ஸ் மிகையாகி அது ஒட்டுமொத்த உணர்ச்சிகளையும் பாதிக்கிறது.
சரியாக தூங்காமல் இருப்பது ஞாபக மறதியுடன் தொடர்புடையதாகும். தூக்கமின்மை என்பது குறுகிய கால மற்றும் நீண்ட கால நினைவக செயல்பாடுகளை (memory function) பாதிக்கிறது. தவிர கவனம் செலுத்துவதில் சிக்கல் மற்றும் முடிவுகளை எடுப்பதில் சிரமங்கள் உள்ளிட்ட பல அறிகுறிகளை தூக்கமின்மை ஏற்படுத்தும்.
தூக்கத்தில் தொந்தரவு ஏற்படும் போது அது நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதித்து அதனை பலவீனமாக்கி விடுகிறது. இதனால் தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் நரம்பியல் ஆரோக்கியத்தை பாதிக்க கூடிய தொற்றுகள் மற்றும் அழற்சிகளால் எளிதில் பாதிக்கப்படலாம்.
நீண்ட நாட்களாக போதிய தூக்கம் இல்லாமல் இருப்பது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்க கூடும். இதற்கு ரத்த அழுத்தம் மற்றும் வாஸ்குலர் ஆரோக்கியத்தில் ஏற்படும் எதிர்மறை தாக்கம் காரணமாக இருக்கலாம்.
நீண்டகால தூக்கமின்மையானது கார்டிசோல் போன்ற மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்கள் உட்பட பல ஹார்மோன்களில் சமநிலையின்மை ஏற்படுத்த கூடும் மற்றும் நரம்பியல் நலனையும் பாதிக்கலாம்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் மேற்கண்ட அறிகுறிகளை அனுபவித்தால் தனது வாழ்க்கை முறையில் தேவையான நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர தகுந்த நிபுணரை அணுக வேண்டும். சரியான நேரத்தில் தூங்க செல்வது மற்றும் தினசரி போதுமான நேரம் தூங்குவது உள்ளிட்ட இயல்பான விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் பலரும் தங்கள் உடல் மற்றும் மன நலன் ஆரோக்கியமாக மாறியிருப்பதை உணர்கிறார்கள் என்கிறார்கள் நிபுணர்கள்.