’சைலன்ட் ஹார்ட் அட்டாக்’ அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா..? அபாயத்தை தவிர்க்க கவனமா இருங்க..!
பொதுவாக ஹார்ட் அட்டாக் அதாவது மாரடைப்பு என்றாலே நமக்கு பயம் தான் வரும். ஆனால், அது என்ன சைலன்ட் ஹார்ட் அட்டாக்? இதன் பெயர் குறிப்பிடுவது போல, சைலன்ட் ஹார்ட் அட்டாக் என்பது எந்த வித அல்லது மிக மிகக் குறைவான அறிகுறிகளுடன் ஏற்படும் ஒரு வகையான ஹார்ட் அட்டாக் ஆகும். சில நேரம் தீங்கற்றதாகத் தோன்றும் அறிகுறிகளும் தென்படலாம். நீங்கள் வெறும் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் என்று நினைத்து இதனை புறக்கணித்து விடவும் கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் அறிகுறிகள் மிகவும் மிதமானதாக இருக்கும்
பொதுவாக சைலன்ட் ஹார்ட் அட்டாக் எந்த ஒரு அறிகுறையையும் காட்டுவது இல்லை. 2015 ஆம் ஆண்டு அமெரிக்க மருத்துவ சங்க இதழில் வெளியிடப்பட்ட மற்றும் ஹார்வர்ட் ஹெல்த் மேற்கோள் காட்டப்பட்ட ஆய்வின்படி, 45 முதல் 84 வயதுக்குட்பட்ட 2,000 பேரிடம் நடத்தப்பட்ட பின்தொடர்தல் ஆய்வில், எந்த வித இருதய நோயும் இல்லாதவர்களுக்கு கூட 10 ஆண்டுகளில் மாரடைப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மாரடைப்பு காரணமாக மாரடைப்பு வடுக்கள் (myocardial scars) இருந்தன.
“இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இவர்களில் 80% பேருக்கு தங்கள் நிலை குறித்து தெரியாது. மாரடைப்பு தழும்புகளின் பாதிப்பு பெண்களை விட ஆண்களில் ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது.” என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணிகள் என்ன?
நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், முதுமை, புகைபிடித்தல், உடல் பருமன், சரீர உழைப்பில்லாத வாழ்க்கை முறை, குடும்பத்தில் ஏற்கனவே இதய நோய் இருப்பது, அதிக கொலஸ்ட்ரால் போன்ற மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளே சைலன்ட் ஹார்ட் அட்டாக்கிற்கான ஆபத்து காரணிகளை ஒத்து இருக்கும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் அடிக்கடி சைலன்ட் ஹார்ட் அட்டாக் தாக்குதல்களை எதிர்கொள்கின்றனர்.
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அறிகுறிகள்:
இதன் அறிகுறிகள் பின்வருமாறு:
மார்பு வலி
மார்பில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல்
பலவீனம்
மயக்கம்
தாடை, கழுத்து அல்லது முதுகில் வலி,
கைகள் மற்றும் தோள்களில் அசௌகரியமான உணர்வு ஏற்படுதல்
சுவாசிப்பதில் சிரமம்
மாரடைப்பு ஏற்படுவதை எவ்வாறு தடுக்கலாம்?
பெரும்பாலும் மாரடைப்பு ஏற்படுவதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே முக்கியமான காரணமாகும். குறைவான உடல் உழைப்பு, சீரற்ற உறக்கம், புகையிலை புகைத்தல், அளவுக்கு அதிகமாக குடிப்பது, போதிய ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்ளாமல் இருத்தல், வீட்டில் சமைத்த உணவு அல்லாமல் உணவு டெலிவரி ஆப்களை அதிகம் சார்ந்திருத்தல், ஆரோக்கியமற்ற எண்ணெய்களை உணவில் பயன்படுத்துவது மற்றும் ஆரோக்கியத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளாமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள் உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கு வழிவகுக்கும்.
எனவே, இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அதனை ஒரு போதும் புறக்கணித்து வீடாக கூடாது. அதே போல், நோயற்ற வாழவே குறையற்ற செல்வம் என்பதை நினைவில் கொண்டு, முடிந்த வரை ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பது நல்லது.