பஞ்சமுக ஆஞ்சநேயர் படத்தை வீட்டில் வைத்தால் என்ன நடக்கும் தெரியும்?
அனுமனை பல விதமான முறைகளில் பக்தர்கள் வழிபடுவது உண்டு. அனுமனை உண்மையான பக்தியுடன் வழிபட்டால் நினைத்த காரியங்கள் நினைத்த படி நடக்கும், வெற்றிகள் குவியும், பயம் விலகும், தைரியம் பிறக்கும், பக்தி நிலை, புத்தி கூர்மை அதிகரிக்கும். அனுமனை வழிபடும் பக்தர்களுக்கு உள் எதிரியும், வெளி எதிரியும் கிடையாது என்பார்கள். பக்தர்களின் மனதில் இருக்கும் காமம், குரோதம், மதம், மாச்சரியம் ஆகிய எதிரிகளை அழிப்பதற்காக தான் அனுமன் தன்னுடைய கையில் கதாயுதத்தை ஏந்திய நிலையில் காட்சி தருவதாக சொல்லப்படுகிறது.
அனுமனின் சிறப்புகள் :
அனுமன், ஆரோக்கியம், தைரியம் ஆகியவற்றை அளிக்கும் கடவுள் என்பது அனைவருக்கும் தெரியும். அனுமனை தூய்மையான பக்தியுடன் தொடர்ந்து வழிபட்டு வந்தால் எந்த தீமைகளும் நம்மை நெருங்காது, நேர்மறை ஆற்றல்கள் எப்போதும் நம்மை சுற்றி நிறைந்திருக்கும். அதோடு சனி பிடிக்காத தெய்வம் என்பதால் அனுமனை வழிபட்டால் அனைத்து விதமான நவகிரக தோஷங்கள், குறிப்பாக எப்படிப்பட்ட சனிதோஷத்தின் பாதிப்பில் இருந்தும் நம்மால் விடுபட முடியும். அனுமனின் பலவிதமான வடிவங்களை நாம் கோவில்களில் தரிசித்திருக்கிறோம்.
அனுமனின் பலவிதமான ரூபங்கள் :
சிலரின் வீடுகளில் அனுமனின் படம் மற்றும் அனுமனின் சிலை வைத்து வழிபடும் வழக்கமும் இருக்கும். அனுமன் தியானம் செய்வது போன்று, நெஞ்சை பிளந்து ராமர்-சீதையை காட்டுவது போது, சஞ்சீவி மலையை தூக்குவது போல், ராமர்-லட்சுமணர்-சீதைக்கு அருகில் மண்டியிட்டு அமர்ந்த நிலையில், கைகளை கூப்பியபடி அமர்ந்த நிலையில், தோள்களில் ராம-லட்சுமணரை சுமந்து செல்வது என பல விதமான ரூபங்களில் அனுமன் அருள் செய்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் இவற்றை விட மிக சிறப்புடையதாக ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்முக ஆஞ்சநேயர் உருவம் கருதப்படுகிறது. இந்த உருவத்தை பலரின் வீடுகளில் நாம் பார்த்திருப்போம். இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் உருவத்தை வீட்டில் வைத்து வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் வடிவ தத்துவம் :
ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயரின் உருவத்தில் ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையை பார்த்தபடி காட்சி தருவார்.
* கிழக்கு நோக்கிய முகம் அறிவு மற்றும் புத்திகூர்மையை குறிப்பதாகும்.
* தெற்கு நோக்கிய நரசிம்மரின் முகம் தைரியம் மற்றும் பாதுகாப்பை குறிப்பதாகும்.
* மேற்கு நோக்கிய கருடனின் முகம் ஆன்மிக மற்றும் சுதந்திர உணர்வை குறிப்பதாகும்.
* வடக்கு நோக்கிய வராஹ முகம் செல்வம் மற்றும் மிகுதியை குறிப்பதாகும்.
* கடைசியாக இருக்கும் ஹயக்ரீவர் முகம் மேல் போக்கி பார்த்தவாறு இருக்கும். இது ஞானம் மற்றும் அறிவுத்திறனை குறிப்பதாகும்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் தரும் பலன்கள் :
பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை கண்திருஷ்டியை போக்குவதற்காகவும், தீய சக்திகளை விரட்டுவதற்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை வீட்டில் உள்ள வாஸ்து தோஷங்கள் அனைத்தையும் நீக்கக் கூடியதாகும். தீய சக்திகளை அகற்றி, மகிழ்ச்சி, வெற்றி, செல்வ வளம், நலன்கள் உள்ளிட்டவைகளை வீட்டில் நிலைக்க செய்யும். பேய், பிசாசுகள், தீய சக்திகளின் மீதான பயம் ஆகியவற்றையும் நீக்கக் கூடியது. பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஒவ்வொரு முகமும் எதை குறிக்கிறது என்பதை தெரிந்து கொண்டு வணங்கும் போது அவற்றின் அனைத்து நன்மைகளையும் நம்மால் பெற முடியும். வீட்டில் எப்போதும் அமைதியும், அதிர்ஷ்டமும், அனுமனின் சக்தியும் நிறைந்திருக்கும்.
வாஸ்து சாஸ்திரத்தில் அனுமன் உருவம் :
பஞ்சமுக ஆஞ்சநேயரின் உருவம் ஆன்மிக வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், தெய்வீக தன்மையுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தும். அதோடு வீட்டில் இருக்கும் அனைத்து வாஸ்து குறைபாடுகளையும் இது நீக்கி விடும். வாஸ்து சாஸ்திரப்படியும் பஞ்சமுக ஆஞ்சநேயரின் உருவம் அமைதியையும், வீட்டில் மங்களங்களையும் தரக் கூடியதாகவும், பாதுகாப்பு, நேர்மறை ஆற்றல்கள், ஆன்மிக பலன்கள் ஆகியவற்றை தருவதாகவும் சொல்லப்படுகிறது. வீட்டில் எப்போதும் ஒற்றுமை, ஆனந்தமான சூழல் அமைய பஞ்சமுக ஆஞ்சநேயரின் ரூபம் உதவும்.