பல்லிகளை வழிபடும் பெருமாள் கோயில் எங்கு உள்ளது தெரியுமா?
ஒரு சமயம் பிரம்மதேவர் சரஸ்வதியின் துணையில்லாமல் யாகம் ஒன்றை நடத்தினார். அதைத் தடுகக நினைத்த சரஸ்வதி தேவி, வேகவதி என்னும் நதியாகப் பெருக்கெடுத்து ஓட, திருமால் அதைத் தடுத்ததோடு, பிரம்ம தேவர் யாகம் நடத்தவும் அருள்புரிந்தார்.
யாக முடிவில் அவிர் பாகத்தை ஏற்றுக்கொண்ட திருமால், கேட்ட வரத்தைத் தந்தும் அருள்புரிந்தார். வரம் தந்த பெருமாளுக்கு இதனாலேயே, ‘வரதராஜன்’ என்ற பெயர் ஏற்பட்டது.
புண்ணியமிகு காஞ்புரத்தில் புண்ணியக்கோடி விமானத்தின் கீழ் மேற்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் வரதராஜப் பெருமாள். பெருந்தேவி தாயார் தனிச் சன்னிதி கொண்டு அருள்பாலிக்கிறார். வரதராஜப் பெருமாள் கோயிலில் உள்ள உத்தரத்தில் இரண்டு பல்லி சிற்பங்கள் உள்ளன. ஒன்றுக்கு தங்கக் கவசமும் மற்றொன்றுக்கு வெள்ளிக் கவசமும் அணிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பல்லி சிற்பங்களை தரிசித்தால் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்.
வரதராஜப் பெருமாள் கோயில் சன்னிதியில் விளங்கும் இந்த பல்லி சிற்பங்களுக்கு ஒரு வரலாற்றுச் சம்பவம் புராணக் கதையாக உள்ளது. ஸ்ருங்கிபேரர் என்ற முனிவரின் இரண்டு மகன்கள் ஹேமன், சுக்லன். இவர்கள் கௌதம முனிவருக்கு அவருடைய ஆசிரமத்தில் தங்கி பணிவிடைகள் செய்து வந்தனர்.
கௌதம முனிவரின் சீடர்களான இருவரும் ஒரு சமயம் குரு செய்யும் பூஜைக்கு தேவையான தீர்த்தத்தை மூடாமல் வைத்துவிட்டனர். அபிஷேக நேரத்தின்போது அதை குருவிடம் கொடுக்க, அதனுள் விழுந்து கிடந்த பல்லி குதித்து ஓடியது. இதனால் கோபமடைந்த கௌதம முனிவர் அந்த சீடர்களை பல்லிகளாக மாறும்படி சபித்து விட்டார். அவர்கள் சாப விமோசனம் கேட்டபோது, ‘மகாவிஷ்ணுவை தரிசித்தால் பாவம் தீரும்’ எனக் கூற, காஞ்சிபுரம் வந்து பல்லிகளாக உத்தரத்தில் தங்கி தவமிருந்தனர். அவர்களின் பக்தியை மெச்சிய பெருமாள் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்தார் என்பது தல வரலாறு.