இந்திய மண்ணில் முதன்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்ட இடம் எது தெரியுமா?
நாட்டில் 75ஆவது குடியரசு தினம் இந்த வருடம் கொண்டாட படுகிறது. இந்தியாவில் அரசியல்சாசனம் அமலுக்கு வந்த ஜனவரி 26-ம் தேதியை குறிக்கும் விதமாக இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய அரசியமைப்பு படி நாட்டின் முதல் குடிமகன் , குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைப்பார்.
இப்படி ஏற்றப்படும் தேசிய கொடி முதன்முதலில் எங்கு யாரால் ஏற்றப்பட்டிருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? இந்தியாவின் முதல் தேசியக் கொடி 1906 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது கொல்கத்தாவில் உள்ள பார்சி பாகன் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது. ஆனால் அது இன்று நாம் பயன்படுத்தும் கொடி போல் அல்லாமல் சிவப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய மூன்று வண்ணங்களில் இருந்தது.
அதன் பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய தேசிய காங்கிரஸ் 1929 ஆம் ஆண்டு நடத்திய கூட்டத்தில் டிசம்பர் 31 ஆம் தேதி அன்று லாகூரில் உள்ள ராவி நதிக்கரையில் ஜவஹர்லால் நேருவால் தேசிய கொடி ஏற்றப்பட்டது. அந்த கூட்டத்தில் ஜனவரி 26 ஆம் தேதியை சுதந்திர தினமாக அனுசரிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இந்த நாள் அங்கீகரிக்கப்படாத முதல் சுந்திர தினமாக பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர், டிசம்பர் 30, 1943 அன்று, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசிய கொடியை போர்ட் பிளேயரில் ஏற்றினார்.
இந்திய சுதந்திரத்திற்கு அஹிம்சை எனும் வழியை காந்தி கையில் எடுத்ததை போல், ஆயுதங்களை கையில் எடுத்து போராடியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் உதவியோடு தனியாக ஒரு ராணுவப்படையை அமைத்து வங்கக்கடல் எல்லை வழியாக ஆங்கிலேயரை நாட்டை விட்டு துரத்த போரிட்டார்.
இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே, 1943 இல் போர்ட் பிளேரில் இந்தியக் கொடியை ஏற்றினார். போர்ட் பிளேயரை பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுவிப்பதற்காக அங்கு கொடி ஏற்றப்பட்டது. அன்றைய தேதியில் இது ஒரு பெரிய அரசியல் அத்துமீறலாக கருதப்பட்டது.
போர்ட் பிளேயரின் தெற்குப் பகுதியில் அவர் கொடி ஏற்றிய பகுதி இன்றும் பத்திரமாக பாதுகாக்கபட்டு வருகிறது. போர்ட் பிளேர், இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து வெகு தொலைவில் அமைந்திருந்தாலும், இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய மிக முக்கியமான இடங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கொடி கம்பத்தின் அருகில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மற்றும் இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடி உயிர் தியாகம் செய்த தியாகிகளின் நினைவாக அர்ப்பணிக்கப்பட்ட கல் கட்டமைப்புகள் உள்ளன.
அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை முறையே ஷஹீத் மற்றும் ஸ்வராஜ் த்வீப் என மறுபெயரிடுமாறு போஸ் பரிந்துரைத்திருந்தார். 2018இல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரதமர் மோடி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுக்கூட்டத்தின் ராஸ் தீவின் பெயரை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தீவு என்றும், நீல் தீவை ஷாஹீத் தீவு என்றும், ஹேவ்லாக் தீவை ஸ்வராஜ் தீவு என்றும் பெயர் மாற்றினார்.
இந்த வரலாற்று இடத்தை ராஜீவ் காந்தி நீர் விளையாட்டு வளாகத்தில் இருந்து எளிதாக அடைய முடியும். இந்த கொடி மரத்தின் அருகே முன்பு பிரிட்டிஷ் காலனித்துவ சிறைச்சாலையாக இருந்த காலா பானி என்றும் அழைக்கப்படும் செல்லுலார் சிறை உள்ளது. கடந்த ஆண்டு இந்த சிறையை இந்திய மக்களிடம் பிரபலப்படுத்த சிறைச்சாலை சுற்றுலா என்பது அறிமுகப்படுத்தப்பட்டது.