உதயசூரியன் பெயரில் நடித்த எம்ஜிஆர்… எந்தப் படம் தெரியுமா?

1966 இல் அன்பே வா படத்தில் வாலி, புதிய வானம் புதிய பூமி எங்கும் பனிமழை பொழிகிறது பாடலை எழுதினார். அதன் முதல் சரணத்தை இப்படி எழுதியிருந்தார்.

உதய சூரியனின்

பார்வையிலே உலகம்

விழித்துக் கொண்ட

வேளையிலே

இமயத்தில் இருக்கும்

குளிர்காற்று இன்று

இதயத்தை தொடுகிறது

அன்று இமயத்தில்

சேரன் கொடி பறந்த

அந்த காலம்

தெரிகிறது…

– இந்த வரிகளில் வழக்கம் போல் நடைமுறை உண்மைகளை கோர்த்திருந்தார் வாலி. அன்பே வா படம் வந்த போது எம்ஜி ராமச்சந்திரன் திமுகவின் தீவிர உறுப்பினர். அதனால், திமுகவின் சின்னமான உதயசூரியனை பாட்டில் கொண்டு வந்தார். எம்ஜி ராமச்சந்திரன் மலையாளி, சேர நாட்டைச் சேர்ந்தவர், அதனால் சேரனையும் பாடலில் இயல்பாக இணைத்துக் கொண்டார்.

அன்றைய தணிக்கைக்குழு புலியை தப்பிக்கவிட்டு, பூனையை பிடிக்கும் விஷயத்தில் கெட்டிக்காரத்தனமாக இருந்தது. உதயசூரியன் என்பது திமுகவின் சின்னம். அதனை பாடலில் அனுமதிக்க முடியாது என்று அதனை நீக்க வைத்தது. வாலியும் உதயசூரியன் என்பதை புதியசூரியன் என்று மாற்றினார்.

1966 இல் உதயசூரியன் என்ற பாடல் வரியை மாற்ற வைத்த தணிக்கைக்குழு, எம்ஜி ராமச்சந்திரன் உதயசூரியன் என்ற கதாபாத்திரப் பெயரில் நடித்த படத்தை எதுவும் செய்யவில்லை. இது நடந்தது 1957 இல்.

எம்ஜி ராமச்சந்திரன் ஆரம்ப காலத்தில் காங்கிரஸ் கட்சியின் விசுவாசியாக இருந்தார். சினிமாவுக்கு வெளியே கதர்தான் அணிவார். சிறந்த பக்திமான். கலைஞர் மு.கருணாநிதியுடனான அவரது நட்பு அவரது சிந்தனையை மாற்றியது. 1953 இல் அண்ணாவின் மீதான நம்பிக்கையில் திமுகவில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டார். தனது ஆன்மிக விருப்பங்களை மனதில் போட்டு புதைத்துக் கொண்டார்.

இப்படியொரு காலகட்டத்தில், 1957 இல் பொங்கலை முன்னிட்டு சக்கரவர்த்தித் திருமகள் படம் வெளியானது. எம்ஜி ராமச்சந்திரன் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் நடிக்க எஸ்.வரலட்சுமி, பி.எஸ்.வீரப்பா, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், கே.ஏ.தங்கவேலு ஆகியோர் முக்கயிமான வேடங்களிலும் நடித்திருந்தனர். அன்றைய முன்னணி திரைக்கதையாசிரியர் பி.ஏ.குமார் எழுதிய கதையின் அடிப்படையில் சக்கரவர்த்தித் திருமகள் படத்தின் திரைக்கதை, வசனத்தை இளங்கோவன் எழுதினார். ப.நீலகண்டன் படத்தை இயக்கினார்.

சக்கரவர்த்தித் திருமகள் படத்தின் போது ப.நீலகண்டனுக்கும், எம்ஜி ராமச்சந்திரனுக்கும் இடையில் ஏற்பட்ட நட்பின் காரணமாக, எம்ஜி ராமச்சந்திரனின் இயக்குநர் என்று குறிப்பிடும் அளவுக்கு அவரை வைத்து 17 படங்கள் இயக்கினார் ப.நீலகண்டன். சக்ரவர்த்தித் திருமகள் வழக்கமான ராஜா, ராணி கதை. எம்ஜி ராமச்சந்திரன் இளவரசனாக நடித்தார். அவருக்கும் இளவரசி அஞ்சலி தேவிக்கும் காதல் பிறக்கும். இதனை பி.எஸ்.வீரப்பா, எஸ்.வரலட்சுமி கூட்டணி எதிர்க்கும். அஞ்சலி தேவியின் இடத்தை கைப்பற்றி, எம்ஜி ராமச்சந்திரனை மணக்க வேண்டும் என்பதற்காக எஸ்.வரலட்சுமி பல திட்டங்கள் போடுவார். பகைவர்களை வென்று அஞ்சலி தேவியுடன் எம்ஜி ராமச்சந்திரன் இணைவது கதை.

சிறப்பான திரைக்கதை, சுவாரஸியமான காட்சிகள், பொறி பறக்கும் சண்டைக் காட்சிகள் என்று சக்கரவர்த்தித் திருமகள் அனைத்துவிதங்களிலும் ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் படத்தில் எம்ஜி ராமச்சந்திரனின் கதாபாத்திரப் பெயர் உதயசூரியன். திமுக வின் சின்னப்பெயர். ஆனால், தணிக்கைக்குழு எதுவும் செய்யவில்லை. காரணம், 1949 இல் தொடங்கப்பட்ட திமுக, அடுத்து வந்த சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை. 1957 இல்தான் முதல்முறை தேர்தலில் போட்டியிட்டது. திமுக கட்சி சார்பாக இல்லாமல் அதன் வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட்டனர். அதற்கு முன்பே உதயசூரியன் சின்னம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தது. எம்ஜி ராமச்சந்திரன் உதயசூரியன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சக்கரவர்த்தித் திருமகள் 1957 ஜனவரி 18 வெளியானது என்றால், தேர்தல் மார்ச் 31 ஆம் தேதி நடந்தது. 34 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக வேட்பாளர்களில் கலைஞர் உள்பட 24 பேர் வெற்றி பெற்றனர். அப்படி எம்ஜி ராமச்சந்திரன் நடித்த உதயசூரியன் கதாபாத்திரம் திமுகவின் முதல் தேர்தல் வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.

1957 இல் எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான ராஜராஜன், புதுமைப்பித்தன்,மகாதேவி படங்கள் வெற்றி பெற்று அவரது ஸ்டார் அந்தஸ்தை உயர்த்தியது.

1957 ஜனவரி 18 வெளியான சக்கரவர்த்தித் திருமகள் நேற்று 67 வது வருடத்தை நிறைவு செய்து இன்று 68 வது வருடத்தில் நுழைகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *