அயோத்தி செல்லும் ரஜினி… உடன் செல்பவர்கள் யார் யார் தெரியுமா?
அயோத்தியில் இந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற உள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கே பங்கேற்கவுள்ளார். அவருடன் முக்கிய பிரமுகர்கள் சிலரும் விழாவில் பங்கேற்க செல்கின்றனர். முன்னதாக ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினிகாந்திற்கு விழா குழுவினர் நேரில் அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் அவர் விழாவில் பங்கேற்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா இம்மாதம் 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், திரை பிரபலங்கள், இந்தியாவின் மிக முக்கிய தொழில் அதிபர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு சில நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் அவருடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த், சகோதரர் சத்ய நாராயணா ஆகியோரும் செல்கின்றனர். இதற்காக விழாவுக்கு முந்தைய நாளான 21ஆம் தேதி சென்னை விமான நிலையத்திலிருந்து இந்த மூவரும் புறப்பட்டு செல்லவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 22 ஆம் தேதி முழுவதுமாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கும் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினர், மறுநாள் 23ஆம் தேதி சென்னை புறப்படுகின்றனர்.
தற்போது வரை தமிழ் சினிமாவைப் பொறுத்த அளவில் நடிகர் ரஜினிகாந்துக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விழா நடைபெற இன்னும் 2 வாரங்கள் இருக்கும் நிலையில், மேலும் சில பிரபலங்களுக்கு ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயில் திறப்பு விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. வரும் 22ஆம் தேதி நண்பகல் 12.20 மணிக்கு கோயில் கருவறைக்குள் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்பட உள்ளது.