ரஜினிக்கு லால் சலாம் படத்தில் டப்பிங் பேசிய பிரபல நடிகர் யார் தெரியுமா?
ஐஸ்வர்யா இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் நாளை தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி இதில் கௌரவ வேடம் ஏற்றுள்ளார். இதன் காரணமாக லால் சலாமின் எதிர்பார்ப்பும், சந்தை மதிப்பும் உயர்ந்துள்ளது.
கிரிக்கெட்டில் எப்படி இந்து, முஸ்லீம் மத அரசியல் நுழைந்து, நிம்மதியை சீரழிக்கிறது என்பதை லால் சலாமில் ஐஸ்வர்யா சொல்லியுள்ளார். மொய்தீன் பாய் கதாபாத்திரம் மத அரசியலை விடுத்து, மனிதர்களாக ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக படத்தில் இடம்பெற்றுள்ளது. லைகா தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
தமிழ்நாட்டில் லால் சலாம் வெளியாகும் அதேவேளை, தெலுங்கில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகிறது. கமல் படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யும் போது பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கமலுக்காக டப்பிங் பேசுவார். அவரது குரல் அப்படியே கமல் பேசுவது போல இருக்கும். கமல் படங்களின் தெலுங்குப் பதிப்புகளின் வெற்றியில் எஸ்.பி.பி.க்கு கணிசமான பங்குண்டு.
ரஜினி படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம்; செய்யப்படும் போது பாடகர் மனோ ரஜினிக்காக டப்பிங் பேசுவார். ரஜினியே தெலுங்கில் பேசுவது போல் அட்டகாசமாக மனோ பேசுவது இருக்கும். ஆனால், லால் சலாம் படத்துக்கு மனோ டப்பிங் பேசவில்லை. அவருக்குப் பதில் நடிகர் சாய் குமார் ரஜினிக்கு டப்பிங் பேசியுள்ளார். சாய் குமார் இதற்கு முன் பெத்தராயுடு, பாட்ஷா படங்களுக்கு ரஜினிக்காக டப்பிங் பேசியுள்ளார். பெத்தராயுடு நாட்டாமை படத்தின் தெலுங்கு ரீமேக். இதில் தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் ரஜினி நடித்திருந்தார். படம் பம்பர் ஹிட்டானது. அதேபோல் பாட்ஷாவும் ஆந்திர பாக்ஸ் ஆபிஸை கலகலக்க வைத்தது.
ரஜினிக்கு சாய் குமார் டப்பிங் பேசிய இரண்டு படங்களும் பம்பர் ஹிட் என்பதால், இப்போது டப்பிங் பேசியிருக்கும் லால் சலாமும் ஹிட்டாகும் என்ற சென்டிமெண்ட் நம்பிக்கையுடன் உள்ளது தெலுங்குப் படவுலகம்.