நாமக்கல்லில் எம்ஜிஆர் ரசிகன் என்னும் சினிமா படம் பெயர்சூட்டு விழா ஹீரோ யாருன்னு தெரியுமா……
நாமக்கல்லைச் சேர்ந்தவர் நடிகர் கோபிகாந்தி, இவர் சர்வதேச ஆர்.எஸ்.ஜி சமுக சேவை மையத்தை நிறுவி நடத்தி வருகிறார். இவர் கடந்த பல வருடங்களாக, சமுதாய விழிப்புணர்வு குறும்படங்கள் தயாரித்துள்ளார். மேலும், முதல் மாணவன், வைரமகன், வீரக்கலை உள்ளிட்ட சினிமாப் படங்களையும், கதை எழுதி, தயாரித்து, நடித்து, வெளியீடு செய்துள்ளார்.
இவரது 4வது சினிமா படமாக உச்சம் தொடு என சர்வதேச விளையாட்டு வீரரின் வாழ்வியலில் கோபி காந்தி தயாரித்து, நடித்து வருகிறார். முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான கோபி காந்தி, 5வதாக தயாரிக்கும் படத்தை அவரே டைரக்ஷன் செய்து நடிக்க உள்ளார். எம்ஜிஆரின் 36வது நினைவு நாளில் இந்த படத்திற்கு, எம்ஜிஆர் ரசிகன் எனும் பெயர் சூட்டு விழா நாமக்கல்லில் நடைபெற்றது.
இவ்விழாவில் நடிகர் மற்றும் இயக்குனர் கோபிகாந்தி கூறியதாவது, எம்.ஜி.ஆர் சிறு வயதில் உணவிற்காக நாடக கொட்டகையில் வேலைக்கு சேர்ந்தார். அவரது கடுமையான உழைப்பு மற்றும் திறமை மூலம் அவர் உயர்ந்த நடிகரானார் பின்னர் தலைவரானார். ஏழை, எளிய மக்களின் நன்மைக்காக அறக்கட்டளையை தோற்றுவித்து அவர் சம்பாதித்த பணம் அனைத்தையும் செலவு செய்தார்.
அவரின் கொடை உள்ளத்தால் ஈர்க்கப்பட்டதால், இன்றும் அவர் துவக்கிய அதிமுக கட்சிக்கு பொதுமக்கள் ஆதரவளித்து வருகின்றனர். உண்மையாக நடப்பவர்களுக்கு எம்.ஜி.ஆரின் ஆசிர்வாதம் கண்டிப்பாக கிடைக்கும். எம்.ஜி.ஆர் மறைந்து 36 ஆண்டுகள் ஆனாலும், இன்றும், உலகம் முழுவதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு உள்ளனர். அவர்களின் நான் ஒரு தீவிர ரசிகன்.
அப்படிப்பட்ட உயரிய தலைவரின் ரசிகனாக நடிப்பதற்காக பல எம்.ஜி.ஆர் ரசிகர்களை சந்தித்து அவர்களிடம் உள்ள சுவாரஸ்யங்களை சேகரித்து கதை எழுதி வருகிறேன். அவரது நினைவு நாளில் படத்தின் பெயர் வைக்க முடிவு செய்து எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான 7 எழுத்தில் எம்.ஜி.ஆர் ரசிகன் என பெயர் சூட்டி உள்ளேன்.
அனைவருக்கும் பிடிக்கும் விதமாக படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளேன். விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இவ்வாறு நடிகரும், இயக்குனருமான கோபிகாந்தி கூறினார். விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் குமரன், எடிட்டர் கோகுல் கிருஷ்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.