கமல், ரஜினிக்கு ஜோடியாக நடித்த இந்த குழந்தை நட்சத்திரம் யார் தெரியுமா?

கமல், ரஜினிக்கு ஜோடியாக நடித்த பலர் பிற்காலத்தில் அவர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார்கள். அன்புள்ள ரஜினிகாந்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் நடித்த மீனா பிறகு அவருக்கு ஜோடியாகவும் நடித்தார்.

இந்திய சினிமாவில் ஆண் நடிகர்களின் நாயக ஆயுட்காலம் நெடியது. அதேநேரம், நடிகைகளின் நாயகி ஆயுட்காலம் குறுகியது. இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாவுடன் இருக்கும் சிறுமி வேறு யாருமில்லை, நடிகை ஷோபனாதான். திருவிதாங்கூர் சகோதரிகள் எனப்படும் லலிதா, பத்மினி, ராகினியின் உறவுக்காரர் ஷோபனா.

1980 இல், தனது 10 வது வயதில் ஷோபனா மங்கள நாயகி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். கிருஷ்ணன் – பஞ்சு இயக்கிய இந்தப் படம் இந்தியில் வெளியான சாஜன் பினா சுகாகன் படத்தின் தமிழ் தமிழுவலாகும். இதில் கே.ஆர்.விஜயா, சரத்பாபு, ஸ்ரீகாந்த், சிவச்சந்திரன் நடித்தனர்.

மங்கள நாயகியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஷோபனா, 1982 ல் பானுமதி இயக்கிய பக்த துருவ மார்க்கணடேயா படத்தின் மூலம் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அவர் நாயகியாக அறிமுகமானது மலையாளத்தில். தனது 14 வது வயதில், பாலசந்திரமேனன் இயக்கிய, ஏப்ரல் 18 படத்தில் நாயகியானார்.

அதே வருடம் தமிழில் கமல் ஜோடியாக எனக்குள் ஒருவன் படத்தில் நடித்தார். அதன் பிறகு ரஜினி, மம்முட்டி, மோகன்லால் உள்பட தென்னிந்திய சினிமாவின் அத்தனை முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்தார். பரதநாட்டியத்துக்காக தன்னை ஒப்புக் கொடுத்த ஷோபனா திருமணம் செய்து கொள்ளவில்லை. பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஷோபனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மங்கள நாயகி வெளியாகி இன்றுடன் (22-03-24) 44 வருடங்கள் நிறைவடைகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *