எலெக்ட்ரிக் வாகனங்களின் சக்கரங்கள் ஏன் வேகமாக சேதமடைகின்றன தெரியுமா? இதுதான் காரணம்!
உலகளவில் மின்சார வாகனங்களின் தேவை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான அனைத்து மோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்கின்றன. 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும், மின்சார வாகனங்களின் விற்பனை 82 விழுக்காடு வளர்ச்சிக் கண்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, சமீபத்தில் வெளியான அறிக்கைகளின்படி, 2022 மற்றும் 2023ஆம் நிதி ஆண்டின் இடையே விற்பனை 157 விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், மின்சார இருசக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருவதாக தரவுகள் கூறுகின்றன, அதன்படி 2023ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் மாதத்திற்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான மின்சார இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன.
என்னதான் மின்சார வாகனங்களின் குறைந்த பராமரிப்புச் செலவு, குறைந்த அளவு காற்று போன்ற நன்மைகள் இருந்தாலும், இதன் சக்கரங்கள் வேகமாக சேதமடைவதாக வாடிக்கையாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய நிபுணர்களின் கருத்தை கேட்டறிந்தோம்.
மின்சார வாகனங்களின் சக்கரங்கள் வேகமாக சேதமடைவதற்குக் காரணம் என்ன?
கேனரி மீடியாவின் இதுகுறித்து சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்து டயர்களும் ஒவ்வொரு முறை சுழலும் போது சிறிய துகள்களை துண்டாக்குகின்றன. கார்கள் வேகமாகப் பயணிக்கும் போதும், வேகமாக செல்லும்போது திடீரென பிரேக் பிடிக்கும்போதும், கூர்மையான திருப்பங்களைச் செய்யும் போது டயர் தேய்மானம் அடைகிறது. பிரெஞ்சு டயர் உற்பத்தியாளரான மிச்செலின் போன்ற நிறுவனங்களின்படி, பிற எரிபொருள் கொண்டு இயக்கப்படும் வாகனங்களில் உள்ள டயர்களை விட மின்சார வாகனங்களில் உள்ள டயர்கள் 20 விழுக்காடு வரை விரைவாக சிதைந்துவிடும் என்று தெரிவித்துள்ளது.
பொதுவாக எலெக்ட்ரிக் வாகன டயர்கள், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட திரெட் வடிவங்கள், ரப்பர் கலவைகள், ஒலியை மட்டுப்படுத்தும் ஃபோம் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. காலிபர் கொல்லிஷன் (Calibre Collision) படி, இது சிறந்த ஆற்றல் திறன், குறைக்கப்பட்ட ரோலிங் எதிர்ப்பு, குறைந்த சாலை இரைச்சல் மற்றும் சக்கரங்களுக்கு உடனடி முறுக்குவிசையை ஏற்படுத்துகிறது.
இந்த அம்சங்கள் வாகனம் ஓட்டுவதில் மகிழ்ச்சியை சேர்க்கலாம் என்றாலும், அவை சாலை சிராய்ப்புகளை அதிகரிக்கின்றன. இதன் காரணமாக காரின் டயர்களுக்கு கூடுதல் அழுத்தத்தைக் கொடுக்கிறது. இது அதிக தேய்மானம் மற்றும் டயர் முற்றிலுமாக சேதமடைவதற்கு வழிவகுக்கிறது. பிற எரிபொருள் உதவியுடன் இயங்கும் கார்களுடன் ஒப்பிடுகையில், மின்சார கார் பேட்டரிகளும் அதிக எடை கொண்டதாக இருக்கின்றன.
ஒரு சராசரி மின்சார வாகன பேட்டரி கிட்டத்தட்ட 450 கிலோ வரை எடையுள்ளதாக இருக்கும் என்று கால்டயர் எனும் நிறுவனம் தெரிவிக்கிறது. இதுவே நீண்ட தூரம் மைலேஜ் தரும் கார்களின் எடை இன்னும் அதிகரிக்கும் என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும். இப்படி அதிகரிக்கும் கார் டயர் தேய்மானம் என்பது பயனாளர்களுக்கு செலவை ஏற்படுத்தும் என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக மாறவும் வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.