ஏன் லீப் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் உள்ளது தெரியுமா ?
பிப்ரவரி 29-ந் தேதியில் உங்கள் நண்பர், தோழி யாருக்காவது பிறந்த நாள் இருந்தால் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் பிறந்த நாள் வரும். இப்படி 4 ஆண்டிற்கு ஒருமுறை, மட்டுமே வரும் பிப்ரவரி 29, ‘லீப் நாள்’ என்றும், ‘லீப் நாள்’ கொண்ட வருடம் ‘லீப் ஆண்டு’ என்றும் குறிப்பிடப்படுகிறது. புவியின் சுழற்சியின் அடிப்படையில் இந்த நாள் கணக்கிடப்படுகிறது.இந்த அரிய தினம் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டிய அபூர்வ மற்றும் அதிசயத் தகவல்களை பார்ப்போம்.லீப் நாளில் பிறந்தவர்கள் ‘லீப்லிங்ஸ்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நான்கு வருடத்திற்கு ஒருமுறைதான் அவர்கள் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள்.
* பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றிவர 365 நாட்களும், சுமார் 6 மணி நேரமும் எடுத்துக் கொள்கிறது. இந்த 365 நாட்களை, நாம் ஒரு ஆண்டாக கணக்கில் கொள்கிறோம். கூடுதலாக இருக்கும் 6 மணி நேரமானது, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, கூடுதலாக ஒரு நாளாக சேர்ந்துவிடுவதால் அது லீப் தினமாகவும், லீப் வருடமாகவும் கணக்கில் எடுக்கப்படுகிறது.
* பூமி சூரியனை ஒரு முறை சுற்றி வர 365 நாட்கள் ஆகிறது. துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 365.242 நாட்கள் அதாவது 365 1/4 நாட்கள். எகிப்தியர்கள் மாறி வரும் பருவ நிலைகளும் தங்கள் நாட்காட்டியும் பல சமயங்களில் ஒத்துப் போகாததை கண்டறிந்தனர்.முதன் முதலில் இந்தக் கால் நாளை ஒரு நாளாக்கி நான்கு வருடங்களுக்கு ஒரு முறை காலண்டரில் சேர்த்த பெருமை கி.மு. 45 இல் வாழ்ந்த ரோமானிய அரசர் ஜூலியஸ் சீசரைச் சேரும். நாம் இப்போது பயன் படுத்தும் க்ரிகோரியன் (Gregorian) காலண்டர், ஜூலியஸ் சீசர் வடிவமைத்த காலண்டரின் லீப் வருடத்தை உள்ளடக்கிய காலண்டர் தான்.
ஸ்வீடனில் 1712 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு 30 நாட்கள்! காரணம் அங்கு அப்போது ஜூலியன் காலண்டரோ அல்லது க்ரிகோரியன் காலண்டரோ நடைமுறையில் இல்லாததுதான். அதன் பிறகு 1753 க்ரிகோரியன் காலண்டரை பின்பற்றி அமைக்கப் பட்ட காலண்டரில் லீப் வருடம் பிப்ரவரி 17 ஆம் தேதிக்குப் பிறகு மார்ச் 1 ஆம் தேதிக்குத் தாவியது. ஆனால் பொதுமக்களுக்கு இந்த முறை பிடிக்கவில்லை; தங்கள் வாழ்நாளிலிருந்து 10 நாட்களைஇழந்து விட்டதாக நினைத்தனர்!
1930 களில் சோவியத் யூனியனிலும் பிப்ரவரி 30 தேதியுடன் இருந்த காலண்டர் புழக்கத்தில் இருந்தது. தொழிலாளிகளின் உற்பத்தித் திறனைப் அதிகரிக்க ஒவ்வொரு மாதமும் 7 நாட்களாக ஞாயிறு விடுமுறை) இருந்த வாரக் கணக்கை மாற்றி 5 அல்லது 6 நாட்கள் தொடர்ச்சியாக விடுமுறை இல்லாத வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் 30 நாட்கள்! மிச்சமிருந்த 5 அல்லது 6 நாட்கள் மாதக் கணக்கில்வராத தேசீய விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டன. ஆனால் ஞாயிறு விடுமுறை என்ற வழக்கம் நெடு நாட்களாக இருந்ததால்,இந்த முறை, அதிக நாட்கள் நீடிக்க முடியவில்லை; 1940 ஆம் ஆண்டு பழையபடி க்ரிகோரியன் காலண்டர் பழக்கத்திற்கு வந்தது.
*லீப் ஆண்டு முதன்முதலில் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ரோமானிய பேரரசர் ஜூலியஸ் சீசரால் அறிமுகப்படுத்தப்பட்டது, அதன் பிறகு ஜூலியன் நாட்காட்டி பெயரிடப்பட்டது.
* பிப்ரவரி 29 அரிய நோய் தினமாகவும் கருதப்படுவது உண்டு.
* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த அந்தோணி என்பவர், ‘லீப் ஆண்டின் தலைநகராக’ தங்கள் மாகாணத்தை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார்.ஏனெனில் அங்கு ‘பிப்ரவரி 29’, திருவிழா போல கொண்டாடப்படுகிறது. அஸ்டெக் கேவ் என்ற இடத்தில் குதிரை நடனம், சிறப்பு விருந்து என விழா களைகட்டுகிறது.
* ஜோதிடர்கள், பிப்ரவரி 29-ல் பிறந்தவர்கள் அசாதாரண புத்திசாலித்தனம் கொண்டிருப்பதாக நம்புகிறார்கள். நிச்சயம் அவர்கள் ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்தவர்களாக உருவெடுப்பார்களாம்.
* கிரீஸ் நாட்டில் பிப்ரவரி 29-ல் திருமணம் செய்வது அமங்கலம் என்ற எண்ணம் உள்ளது. அப்படி திருமணம் செய்பவர்களின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்காது என்றும் எளிதில் விவாகரத்து செய்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது. ஐந்தில் ஒருவர் லீப் ஆண்டில் திருமணம் செய்வதை தவிர்த்துவிடுகிறார்களாம்.
* ஸ்காட்லாந்து இளவரசி மார்க்கெரெட், 1288-ல் பிப்ரவரி 29-ல் பெண்களின் காதலை அறிவிக்கும் ஆணை ஒன்றை பிறப்பித்தார். அந்த நாளில் பெண்கள் வெளிப்படுத்தும் காதலை நிராகரித்தால் ஆண்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு ‘லீப் இயர்’ என்ற திரைப்படமும் 2010-ல் எடுக்கப்பட்டுள்ளது.
* லீப் ஆண்டில் நடந்த முக்கிய நிகழ்வுகள் பல உள்ளன. லிட்டில் பிர்காம் போர் 1876-ல் நடந்தது. டைட்டானிக் கப்பல் மூழ்கிய 1912 ஒரு லீப் ஆண்டாகும். பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் மின்சார சக்தி கொண்டது நிரூபித்த ஆண்டு (1752) லீப் ஆண்டாகும்.
*பிப்ரவரி 29 ஆம் தேதி பிறந்த நம்மூர் பிரபலங்கள்: மறைந்த பிரதமர் மொரார்ஜி தேசாய் மற்றும் நடனக் கலைஞா் ருக்மிணி தேவி.உலகப் புகழ் பெற்ற சூப்பர் மேன் பிறந்தது இதே பிப்ரவரி 29. இவரது 50 வது பிறந்த நாளை ‘டைம்ஸ்’ பத்திரிக்கை 1988 ஆம் ஆண்டு தனது அட்டைப் படத்தில் சூப்பர் மேனைப் பற்றிய விவரங்களை வெளியிட்டு கொண்டாடியது.ஆஸ்திரேலியாவில் உள்ள தாஸ்மேனியா பிரதமர் சர் ஜேம்ஸ் வில்சன் பிறந்தது, இறந்தது இரண்டுமே பிப்ரவரி 29 ஆம் தேதிதான்!