உங்களுக்கு வீடியோ கேம் பிடிக்குமா? அப்போ உங்கள் காதுகளை ‘பத்திரமாக’ பார்த்துக் கொள்ளுங்கள்!

நீங்கள் அதிக நேரம் வீடியோகேம் விளையாடுபவரா? அதிலும் கேம் விளையாடும் போது எந்நேரமும் ஹெட்போன் அணிந்திருப்பீர்களா? அப்படியென்றால் அதிக நேரம் திரையை பார்த்தபடியே இருப்பதால் கண் பார்வை கெடுவதோடு உங்களின் காது கேட்கும் திறனும் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஹெட்போன் அணிந்து வீடியோகேம் விளையாடுவதால் எந்நேரமும் காதிற்குள் இரைச்சலும் சத்தமே கேட்டுக்கொண்டே இருப்பதால் நாளடைவில் காதிரைச்சல் (டின்னிடஸ்) அல்லது கேட்கும் திறன் இழந்து போகும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்றைய காலத்தில் பலரும் ஹெட்போன், இயர்பட்ஸ் போன்றவை அணிந்தபடியே தான் எந்நேரமும் பாடல்களை கேட்கிறார்கள். இதுவே நாம் அபாயகரமான சத்தத்தில் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதிக சத்தத்துடன் வீடியோகேம் விளையாடுவதால் ஏற்படும் விளைவுகளை நாம் பெரிதாக கண்டுகொள்வதில்லை. அதிலும் குறிப்பாக தினமும் ஹெட்போன் அணிந்து வீடியோகேம் விளையாடும் போது, அதிகபட்சமாக அனுமதிக்கப்படுள்ள அளவை தாண்டியும் நம் காதில் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

இதுதொடர்பாக உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இளைஞர்களிடத்தில் வீடியோ கேம் விளையாடும் போக்கு 20 முதல் 68 சதவிகிதம் நிலவுவதாக ஆறு ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 60 சதவிகிதத்தினர் கேமிங் செண்டர் சென்று வீடியோகேம் விளையாடுவதாக தென் கொரியாவில் நடத்தப்பட்ட இரண்டு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பத்து மில்லியனுக்கும் மேற்பட்ட நபர்கள் வீடியோ கேமில் அதிக ஓசை வைத்தபடி விளையாடுகிறார்கள் என அங்கு நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது. காது கேளாமைக்கும் வீடியோ கேம் விளையாடுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக பெரும்பாலான ஆய்வுகள் கூறுகின்றன.

இந்த ஆய்வுகள் மூலம் கிடைத்துள்ள தரவுகள் குறைவுதான் என்றாலும், சில வீடியோகேமர்ஸ், குறிப்பாக தொடர்ச்சியாகவும் அதே சமயத்தில் சராசரி ஒலி அளவை தாண்டியும் கேட்டபடியே விளையாடுபவர்களுக்கு பாதுகாப்பற்ற முறையில் காதுகளில் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது என்பது அவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு நிரந்தரமாக காது கேட்கும் திறன் இழந்து போகும் வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

ஒலியின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க, பாதுகாப்பான அளவில் கேட்கும் நேரம் குறைவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உதாரணமாக ஒருவர் சராசரியாக 80 டெசிபல் அளவிற்கு பாடலைக் கேட்டால், வாரத்திற்கு 40 மணி நேரம் அவரால் பாதுகாப்பான அளவில் கேட்க முடியும். அதுவே 90 டெசிபல் அளவிற்கு அந்த நபர் கேட்க முடிவெடுத்தால், அவரால் வாரத்தில் நான்கு மணி நேரம் மட்டுமே பாதுகாப்பான அளவில் பாடல்களைக் கேட்க முடியும்.

வீடியோ கேம் விளையாடும் போது உங்கள் காதுகளை பாதுகாப்பதற்கான வழிகள்

உங்கள் சாதனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவிலிருந்து 60 சதவிகிதமாக ஒலியை குறைத்துக் கொள்ளுங்கள்.

கூடுமானவரை ஹெட்போனில் கேட்பதற்குப் பதிலாக வெளிப்புற ஸ்பீக்கரில் கேட்பதை விரும்புங்கள். அப்படியே ஹெட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், காதில் நன்கு பொறுந்தக்கூடியதாகவும் இரைச்சலை கட்டுப்படுத்தும் கருவிகளாகவும் பார்த்து தேர்ந்தெடுங்கள்.

ஒலியின் அளவை பாதுகாப்பான அளவில் வைத்திருக்கவும், அதிகரிக்காமல் கண்காணிக்கவும் உதவும் செயலிகளை பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் நிச்சயம் இதற்கான செயலிகள் இருக்கும்.

ஒலியளவை கண்காணிக்கும் செயலிகள் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் ஹெட்போனை பார்த்து வாங்குங்கள்.

நீண்ட நேரத்திற்கு தொடர்ச்சியாக அதிக சத்தத்துடன் கேம் விளையாடாதீர்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 10 நிமிடங்கள் ஓய்வெடுங்கள் அல்லது சத்தமேயில்லாமல் மியூட்டில் வைத்து விளையாடுங்கள்.

ஒரே ஹெட்போனை பல வருடங்களாக உபயோகிக்காதீர்கள். வருடத்திற்கொருமுறை மாற்றுங்கள் அல்லது நல்ல நிலைமையில் இருக்கிறதா எனப் பரிசோதியுங்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *