“வருமான வரித்துறையை அனுப்புறேன்னு நினைக்கிறீங்களா?” வைரலான பிரதமர் மோடியின் பேச்சு…
தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்ற மோடி, டிசம்பர் 17 அன்று `விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார்.
அப்போது, அங்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி யுபிஎஸ்சி ஆஸ்ப்பிரண்ட் இளைஞருக்கும் மோடிக்கும் இடையே நடந்த உரையாடல் வைரலாகியுள்ளது.
`என்ன செய்கிறீர்கள், எவ்வளவு படித்து இருக்கிறீர்கள்’ என்று மோடி கேள்வி கேட்க, அந்த இளைஞன் `வர்த்தக துறையில் டிகிரி படிப்பை முடித்து இருக்கிறேன்…அதோடு ஒரு கடையை நடத்தி வருகிறேன், கூடவே யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்ற ஆர்வமாக இருக்கிறேன்’ என்று கூறினார்.
`மத்திய அரசின் நலத்திட்டங்கள் மூலமாக எப்படிப் பயனடைந்தீர்கள்’ என்ற மோடியின் கேள்விக்கு, கடை வைக்க உதவியது முதல் தனக்குக் கிடைத்த நலத்திட்டங்களைக் குறித்து அந்த இளைஞர் வரிசையாக அடுக்கினார். இதுவரையில் சாதாரணமாகச் சென்று கொண்டிருந்த உரையாடல், இதற்குப் பின் நகைச்சுவையாகத் தொடங்கியது.
`எத்தனை நபர்கள் கடைக்கு வருவார்கள்’ என மோடி கேள்வியைத் தொடர, `நான் அதை எண்ணிப்பார்த்ததில்லை. ஆனால் தினமும் 10 முதல் 12 பேர் வருவார்கள்’ என்று அந்த இளைஞர் கூறினார். உடனே, `அப்படியென்றால் மாதம் எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?’ மோடி கேட்டதும், சற்று தயக்கத்துடன், `நான் அதைப் பற்றியெல்லாம் எண்ணியதில்லை’ என்றார் அந்த இளைஞர்.
பின்னர், மோடி, `பரவாயில்லை… என்னிடம் சொல்ல வேண்டாம். வருமான வரித்துறை அதிகாரிகள் யாரும் வரமாட்டார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளை மோடி அனுப்புவார் என்று நீங்கள் நினைகிறீர்களா? என்று கூறியபடி சிரிக்க, அந்த இளைஞருடன் சுற்றியிருந்தவர்களும் சிரித்தனர்.
இந்த நிகழ்வின் வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. அதேசமயம், நகைச்சுவையான கேள்விகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மைத்தன்மை யாருக்குத் தெரியும் என நெடிசன்கள் கருத்துகளும் தெரிவித்து வருகின்றனர்.