ஏழுமலையானை தரிசனம் செய்ய திருப்பதி போகணுமா ? ஏப்ரல் மாத கட்டண தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..!
திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், திருப்பதி ஏழுமலையானை வரும் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஏப்ரல் மாதம் திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படவுள்ளது. காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான வலை தளத்தில் கட்டண தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படும் என தேவஸ்தானம் போர்டு அறிவித்துள்ளது.காலை 10 மணி முதல் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட் தேவஸ்தானத்தின் இணையதளம் மூலம் வெளியிடப்பட உள்ளது. ttdevasthanams.ap.gov.in என்ற இணையதள பக்கத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் திருப்பித ஏழுமலையானை வழிபட தேவையான டிக்கெட்டுகள், கட்டண சேவை டிக்கெட்டுகள் ஆகியவற்றை திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடந்த மாதம் 18 ஆம் தேதி தொடங்கி 27 ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிட்டது.
இதனிடையே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை 25 ஆம் தேதி வியாழக்கிழமை தீர்த்த முக்கொடி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க காலை 5 மணி முதல் 12 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் 10 முதல் 50 வயது வரை உள்ள பக்தர்களுக்கு மட்டுமே தீர்த்த முக்கொடியில் பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம் பவுர்ணமியை முன்னிட்டு திருமலையில் கருட சேவையும் நடைபெறுகிறது. இதனால் வரும் நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஏப்ரல் மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம். அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.