புதுசா பிஸ்னஸ் செய்ய ஆசைப்படுறீங்களா? இந்த ஐடியாக்களை படிச்சு பாருங்க!

புதுமையான தொழிலோ அல்லது வேலையோ செய்யத் தொடங்கி அதில் பெரிய அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பது தான் பலரது கனவாக இருக்கிறது. ஆனால் எந்த வகையான தொழில்களுக்கு மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என தெரியாமல் குழப்பம் ஏற்படும். நல்ல எதிர்காலம் கொண்ட சிறந்த சிறுதொழில் ஐடியாக்களின் பட்டியலை பார்க்கலாம்.

ஈ- காமர்ஸ் தளம்: குறிப்பிட்ட ஒரு தயாரிப்பை தேர்வு செய்து அதற்கான ஒரு ஈ காமர்ஸ் தளத்தை உருவாக்கி கொள்ளுங்கள். டிரெண்டிங்கான பொருட்கள் என்னென்ன என்பதை ஆன்லைனில் ஆய்வு செய்து அதில் குறிப்பிட்ட சிலவற்றை தேர்வு செய்து எளிதாக டிராப் ஷிப்பிங் செய்யலாம் அல்லது நீங்களே பொருட்களை வாங்கி வைத்தோ அல்லது தயாரித்தோ விற்பனை செய்யலாம்.

செல்லப் பிராணிகளை அழகுப்படுத்துவது: வெளிநாடுகளில் வளர்ந்து வரும் ஒரு தொழில் இது. நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளை அழகுப்படுத்துவது இதில் வேலை. இதற்காக முறையான பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. அதாவது உரிமையாளரின் வீட்டிற்கே சென்று செல்லப்பிராணிகளை அழகுப்படுத்தலாம். நீங்களே சொந்தமாக ஒரு சலூன் கூட வைக்கலாம்.

ஆலோசகர்: ஆலோசகர் பணி என்பது இந்தியாவில் தற்போது வளர்ந்து வரும் ஒரு துறை. அதாவது ஏதேனும் ஒரு துறையில் நீங்கள் வல்லுனராக இருக்க வேண்டும். மார்க்கெட்டிங், தொழில் மேம்பாடு, விற்பனை, வாடிக்கையாளர் சேவை என எந்த ஒரு துறையிலும் நீங்கள் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும். உங்கள் முறைப்படுத்தி விளம்பரப்படுத்தி ஆலோசகர் பணியை மேற்கொள்ளலாம். கல்வி ஆலோசகர், வேலைவாய்ப்பு ஆலோசகர் ஆகியவையும் இதில் அடங்கும்.

நிகழ்ச்சி திட்டமிடல்: பிறந்தநாள், காது குத்து, திருமணம், வளைகாப்பு, நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகள் என தற்போது அனைத்துமே பரவலாக ஹால் வாடகைக்கு எடுத்து கொண்டாடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளுக்கான திட்டமிடலை முறையாக செய்வது, ஹால்களை தேர்வு செய்வது, பொழுதுபோக்குகளுக்கு ஏற்பாடு செய்வது என நிகழ்ச்சி தொடக்கம் முதல் முடிவு வரை அனைத்தையும் திட்டமிட்டு கொடுக்கும் நிறுவனத்தை தொடங்கலாம். இந்தியாவில் இந்த தொழிலுக்கான எதிர்காலம் சிறந்த முறையில் இருக்கும்.

ஃபிட்னஸ் டிரெய்னர்: உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் நீங்கள் வல்லவர், ஊட்டச்சத்து, உடற்பயிற்சி குறித்த அறிவு இருக்கிறது என்றால் நீங்கள் கண்டிப்பாக இதனை முயற்சி செய்யலாம். உங்களின் ஃபிட்னஸ் திறன்களை விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை ஈர்க்கலாம். வசதி படைத்த வாடிக்கையாளர்கள் அவர்களின் பெர்சனல் டிரெய்னர்களாக உங்களுக்கு வேலை தரும் வாய்ப்பு உள்ளது.

நிதி திட்டமிடல்: பட்ஜெட் போடுவதில் நீங்கள் கில்லாடி என்றால் அது சார்ந்த திறன்களை விளம்பரப்படுத்தி நிதி திட்டமிடுபவராக மாறலாம். நிறுவனங்கள், தனிநபர் என உங்கள் நிதி திட்டமிடல் திறனை பயன்படுத்திக் கொள்ள ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் நீங்கள் திறமையானவர் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துவது மிக முக்கியம்.

செல்லப்பிராணிகளை பார்த்துக் கொள்வது: வெளிநாடுகளில் இதற்கான தேவை அதிகமாகவே இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள், சுற்றுலா செல்பவர்கள் , பணி நிமித்தமாக வெளியூர் செல்பவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளை நம்பிக்கையுடன் விட்டு செல்லும் வகையில் பெட் கேர் சர்வீஸை தொடங்கலாம். இந்தியாவில் எதிர்காலத்தில் இது நல்ல வளர்ச்சி அடையும் வாய்ப்புள்ளது. செல்லப்பிராணிகள் பராமரிப்புக்கு உரிய அனுபவமும் முக்கியம்.

விர்சுவல் அசிஸ்டெண்ட்: பெரும்பாலும் இதனை வீட்டில் இருந்தே செய்யலாம். நிர்வாக ரீதியான சேவைகளை மெய்நிகராக வழங்குவது. வாடிக்கையாளரின் பணி சார்ந்த சந்திப்புகளை திட்டமிடுவது, அவர்தம் வாடிக்கையாளர்களிடம் பேசுவது, பயண ஏற்பாடுகளை செய்வது, மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடக கணக்குகளை நிர்வகிப்பது ஆகியவை இதில் அடங்கும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *