Doctor Vikatan: கருத்தரித்தலை பாதிக்குமா ஃபைப்ராய்டு கட்டிகள்?
Doctor Vikatan: என் வயது 31. திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் கருத்தரிக்கவில்லை. பல சிகிச்சைகளுக்குப் பிறகு இப்போது ஃபைப்ராய்டு கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
ஃபைப்ராய்டு கட்டிகள் இருந்தால் கருத்தரிப்பது பாதிக்கப்படுமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர்நலம் மற்றும் குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ்.
மகளிர்நலம் & குழந்தையின்மை சிகிச்சை சிறப்பு மருத்துவர் மாலா ராஜ் சென்னை.
ஃபைப்ராய்ட்ஸ் (Fibroids) என்பவை கர்ப்பப்பையில் உள்ள புற்றுநோய் அல்லாத கட்டிகள். இந்த ஃபைப்ராய்டு கட்டிகள் கருத்தரிப்பதலும், கருவைச் சுமப்பதலும், சில சமயங்களில் பாதிப்பை ஏற்படுத்தலாம். அந்தக் கட்டிகள் கருத்தரிப்பை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பல காரணிகளைப் பொறுத்தது:
கர்ப்பப்பையில் உள்ள கட்டிகளின் அளவு மற்றும் அவை அமைந்துள்ள இடத்தைப் பொறுத்து அவை கருத்தரிக்கும் திறனை பாதிக்கலாம். கர்ப்பப்பையின் வடிவத்தைச் சிதைக்கக்கூடிய, கருவுற்ற முட்டையின் இணைப்பைத் தடுக்கும் வகையிலான ஃபைப்ராய்டு கட்டிகள் என்றால் அவை கருத்தரிப்புத் திறனை பாதிக்கலாம்.
கர்ப்பப்பையில் ஏற்படும் அனைத்துக் கட்டிகளும் அறிகுறிகளை ஏற்படுத்தாது. எனினும், பெரிய கட்டிகளும், அதிக அளவிலான ப்ளீடிங், இடுப்பு வலி அல்லது அழுத்தம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் கட்டிகளும் மறைமுகமாக கருத்தரிக்கும் திறனை பாதிக்கலாம். அதாவது இவை தாம்பத்திய உறவில் சிரமத்தை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதன் மூலமோ மறைமுகமாக கருத்தரிப்புத் திறனை பாதிக்கலாம்.
கர்ப்பப்பையில் ஏற்படும் கட்டிகள் எண்டோமெட்ரியோசிஸ் அல்லது பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) போன்ற பிற இனப்பெருக்க பிரச்னைகளுடன் தொடர்புடையவையாகவும் இருக்கலாம். அப்படி இருந்தால் அவை தனித்தனியாக கருத்தரிப்புத் திறனை பாதிக்கலாம். கர்ப்பப்பை கட்டிகளுக்கு, அவற்றின் தீவிரத்தைப் பொறுத்து மருந்துகள், அறுவை சிகிச்சை அல்லாத முறைகள் அல்லது அறுவை சிகிச்சை ஆகியவை பரிந்துரைக்கப்படும்.