Doctor Vikatan: வேளை தவறி மருந்துகள் எடுத்தால் அவை வேலை செய்யாதா?
Doctor Vikatan: சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பும் சிலவற்றை சாப்பிட்ட பிறகும் எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
வேளை தவறி எடுத்துக்கொள்வதால் ஏதேனும் பிரச்னைகள் வருமா? சாப்பாட்டுக்கு முன்பும் பிறகும் மருந்துகள் எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?
பதில் சொல்கிறார் நாகர்கோவிலைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி
எந்த ஒரு மருந்தும், அதை எடுத்துக்கொள்ளும்போது மனித உடலில் எந்தெந்தப் பகுதிகளில், எப்படி வேலை செய்ய வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான் தயாரிக்கப்படுகிறது.
மருந்துகளில் பார்மகோகைனெட்டிக்ஸ் (Pharmacokinetics) மற்றும் பார்மகோடைனிமிக்ஸ் ( Pharmacodynamics) என்று சொல்வோம். அதாவது அவை நம் உடலில் எந்தெந்தப் பகுதிகளில் சென்று, ரத்தத்துடன் கலந்து எப்படி வேலை செய்கின்றன என்பதைக் குறிக்கும் விஷயங்கள் இவை.
அதன் அடிப்படையில்தான் எந்த மருந்தை சாப்பாட்டுக்கு முன்பும் எதை சாப்பிட்ட பிறகும் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படும். அப்படி எடுத்துக்கொண்டால்தான் அந்த மருந்தின் வீரியம் முழுமையாக உடலுக்குக் கிடைக்கும். சாப்பாட்டுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகளை சாப்பிட்ட பிறகு எடுத்துக்கொண்டால், உணவுடன் சேர்ந்து அதன் வீரியம் குறையலாம்.
சில மருந்துகளை வெறும்வயிற்றில் எடுக்கக்கூடாது. அப்படி எடுத்தால் அவை வயிறு மற்றும் குடல் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அதன்படி பார்த்தால் வலி மாத்திரை, காய்ச்சல் மாத்திரை போன்றவற்றை சாப்பாட்டுக்குப் பிறகு எடுத்துக்கொள்ளவே அறிவுறுத்துவோம்.