Doctor Vikatan: லேசான குளிரைக்கூட தாங்க முடியாத நிலை… பிரச்னையின் அறிகுறியா, சிகிச்சை தேவையா?
Doctor Vikatan: என் வயது 38. என்னால் லேசான குளிரைக் கூட தாங்கிக்கொள்ள முடிவதில்லை. தியேட்டர், பணியிடம் போன்ற இடங்களில் ஏசி செய்யப்பட்ட சூழலில் என்னால் இயல்பாக இருக்க முடிவதில்லை.
மற்றவர்கள் எல்லோரும் இயல்பாக இருக்க நான் மட்டும் நடுங்கியபடி உட்கார்ந்திருக்கிறேன். இதற்கு என்ன காரணம்…. சிகிச்சை தேவைப்படுமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட் டாக்டர் ஸ்பூர்த்தி அருண்.
இதை மருத்துவமொழியில் ‘கோல்டு இன்டாலரென்ஸ்’ (Cold intolerance) என்று சொல்வோம். இந்தப் பிரச்னை உள்ளவர்களால் எந்தவிதமான குளிர்ச்சியையும் தாங்கிக்கொள்ளவே முடியாது.
உடலின் வெப்பநிலை ஒரேயடியாகக் குறையும் ‘ஹைப்போதெர்மியா’ ( Hypothermia) பிரச்னையும் இதுவும் வேறு வேறு. அதாவது கோல்டு இன்டாலரென்ஸ் உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை இயல்பாகவே இருக்கும். ஆனால் அவர்களால் குளிரை மட்டும் தாங்கவே முடியாது. இந்தப் பிரச்னை ஏற்பட பல காரணங்கள் உண்டு. முக்கியமாக உடலின் கொழுப்பு சதவிகிதம் மிகவும் குறைவாக இருந்தால், இப்படி உணரலாம். அதாவது நம் சருமத்தின் அடியில் சப்கியூட்டேனியஸ் கொழுப்பு என ஒன்று இருக்கும்.
அதுதான் உடல்வெப்பநிலையிலிருந்து பாதுகாப்பு அளிப்பது. இது குறைவாக இருந்தால் அவர்களால் குளிரைத் தாங்கிக்கொள்ள இயலாமல் போகலாம். குளிர்ச்சியான சூழல்களில் இருந்து பழக்கமில்லாதவர்களுக்கும் இப்படி நிகழலாம். திடீரென அப்படிப்பட்ட சூழலில் இருக்க வேண்டி வரும்போது ஆரம்பத்தில் சில நாள்களுக்கு அப்படித்தான் இருக்கும். பழகப் பழக உடல் அந்தக் குளிரைத் தாங்கிக் கொள்ளும்.
அனோரெக்ஸியா என்ற உணவுக்குறைபாடு பிரச்னை சிலருக்கு இருக்கலாம். இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரித்துவிடக்கூடாது என்ற கவலை எப்போதும் இருக்கும். அதனால் உணவு விஷயத்தில் அதிதீவிர எச்சரிக்கை உணர்வோடு இருப்பார்கள். இதனாலும் அவர்களது உடலில் கொழுப்பு அளவு குறைந்து, அதன் தொடர்ச்சியாக குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம்.
அடுத்த காரணம் அனீமியா எனப்படும் ரத்தச்சோகை. அதாவது ரத்தச்சோகை காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதனாலும் குளிர் தாங்க முடியாத நிலை ஏற்படும். இரும்புச்சத்துக் குறைபாடு, வைட்டமின் பி குறைபாடு போன்றவற்றால் ரத்தச்சோகை வரும். அதை சரிசெய்ய வேண்டியது அவசியம்.
தைராய்டு சுரப்பி குறைவாக வேலை செய்யும் ஹைப்போதைராய்டு பாதிப்பு உள்ளவர்களுக்கும் குளிரைத் தாங்க முடியாத நிலை ஏற்படலாம். சிலருக்கு குளிரைத் தாங்க முடியாதது மட்டுமன்றி, வலி, மரத்துப்போவது, உதறல் போன்றவைகூட இருக்கலாம். இன்னும் சிலருக்கு சருமம் வெளிறியோ, நீலநிறத்திலோ மாறக்கூடும். அதை ‘ரேனாட்ஸ் டிசீஸ்’ (Raynaud’s disease) என்று சொல்வோம்.
இந்தப் பிரச்னையில் ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கப்படுவதால் சருமம் வெளிறிப்போய், பிறகு நீலநிறமாக மாறும். இதற்கு மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் தேவைப்படும். எனவே உங்கள் விஷயத்தில் இவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ற சிகிச்சையை எடுக்கவும்.