தலைக்குக் குளிக்கும் நாள்களில் சாம்பிராணி புகை போடுவது சரியானதா?
எண்ணெய்க் குளியல் எடுத்த பிறகு தலைக்கு சாம்பிராணி போடுவது சரியானதா…சாம்பிராணி புகை வீஸிங் பிரச்னையை ஏற்படுத்தும் என்பது உண்மையா? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் திருப்பதி.
நுரையீரல் மருத்துவர் திருப்பதி
தலைக்குக் குளிக்கும் நாள்களில் சாம்பிராணி புகை போடுவதில் தவறில்லை. சிறுவயதிலிருந்தே நம்மில் பலரும் அந்தப் பழக்கத்துக்கும் நறுமணத்துக்கும் அறிமுகமாகியிருப்போம்.
அதே சமயம், சிலருக்கு இது போன்ற வாசனைகளும் புகையும் வீஸிங் பிரச்னையை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்கெனவே அவர்களுக்கு உள்ள பிரச்னையை இன்னும் தீவிரப்படுத்தலாம். தனிப்பட்ட முறையில் என்னுடைய குழந்தைப்பருவ நாள்களில் எண்ணெய்க் குளியல் எடுத்தபின் கதகதப்பான சூட்டில், மனதை வருடும் வாசனையுடன் சாம்பிராணி போட்டுக்கொண்ட நினைவுகள் இன்னும் நீங்காமல் இருக்கின்றன.
ஆனால் ஒரு மருத்துவராக அதை நான் எல்லோருக்குமான விஷயமாக ஆதரிக்க முடியாது. ஆஸ்துமா, அலர்ஜி பாதிப்புள்ளவர்களுக்கு இது நிச்சயம் பிரச்னையைக் கொடுக்கலாம்.
ஊதுவத்தி, சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருள்களும், புகையைக் கிளப்புகிற வஸ்துகளும் வாயுப் பொருள்கள், கரிமச் சேர்மங்களை உள்ளடக்கியவையாக இருக்கும். அவை வெளியிடும் மாசு மற்றும் புகையானது சுவாசப்பாதை பிரச்னைகளை ஏற்படுத்தலாம். அவை வெளியிடும் மாசை உள்ளிழுக்கும்போது சுவாசப்பாதை செயலிழப்புகூட ஏற்படலாம்.
ஊதுவத்தியின் புகையானது ரத்தத்தில் IgE அளவுகளை அதிகரித்து, அதன் விளைவாக சரும அலர்ஜிகூட ஏற்படலாம். மற்றபடி இதுபோன்ற அலர்ஜி அல்லது சுவாசப்பாதை பிரச்னைகள் இல்லாதவர்கள் சாம்பிராணி போட்டுக்கொள்ளலாம். அவர்களுமே சாம்பிராணி புகை போடும்போது வீட்டின் கதவுகள், ஜன்னல்களைத் திறந்துவைக்க வேண்டியது அவசியம். அதன் மூலம் காற்று மாசு நீர்த்துப்போய், புகை ஏற்படுத்தும் பாதிப்பின் தீவிரம் குறையும்.