முட்டை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் கூடுமா? மஞ்சள் கரு சாப்பிடலாமா? இதை தெரிஞ்சுக்கோங்க!
முதலில் கொலஸ்ட்ரால் என்றாலே நம் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற ஒரு பொதுவான கருத்து பலரிடம் இருக்கிறது. அதற்கு கொலஸ்ட்ரால் என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். கொலஸ்ட்ரால் என்பது மெழுகு போன்ற, கொழுப்பு மாதிரியான ஒரு பொருள். இது கல்லீரலால் உற்பத்தி செய்யப்படுகிறது. நமது உடலில் செல் சவ்வுகள் மற்றும் வைட்டமின் D உற்பத்தியில் கொலஸ்ட்ரால் முக்கிய பங்கு வகிக்கிறது.
கொலஸ்ட்ராலால் நமது உடலில் தானாக பயணிக்க முடியாது. அது நீரில் கரையாது. எனவே அதற்கு லிப்போ புரோட்டீன் அவசியம். லிப்போ புரோட்டீன் என்பது கொலஸ்ட்ராலை ரத்தத்தில் நகர்த்துவதற்கு பயன்படும் ஒரு பொருளாகும். இரண்டு வகையான லிப்போ புரோட்டீன்கள் உள்ளன. ஒன்று அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (High Density Lipoprotein- HDL) மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டீன் (Low Density Lipoprotein- LDL).
நமது உடலில் அதிக HDL மற்றும் குறைவான LDL இருக்க வேண்டும். நம் ரத்தத்தில் அதிகப்படியான LDL இருக்கும் பொழுது நமக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பதாக கருதப்படுகிறது. அதிக அளவு LDL மற்றும் HDL குறைவாக இருந்தால் கொழுப்புகள் ரத்தநாளங்களில் படியலாம். இதனால் ரத்த ஓட்டம் தடைபட்டு அதன் காரணமாக பல்வேறு விதமான உடல் நல கோளாறுகள், குறிப்பாக இதயம் மற்றும் மூளையை பாதிக்கலாம்.
கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிப்பதில் நமது உணவு முக்கிய பங்கு கொண்டுள்ளது. எனவே நாம் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏற்கனவே அதிக கொலஸ்ட்ரால் பிரச்னையினால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய நபர்கள் அவர்களது உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிக கொலஸ்ட்ரால் பிரச்னை கொண்ட பலருக்கு முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா இல்லையா என்ற குழப்பம் இருக்கலாம்.
முட்டை என்பது ஒரு ஆரோக்கியமான உணவு. அதில் புரோட்டீன்கள், நல்ல தரமான கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் காணப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவுகளை அதிகரிப்பதில் முட்டை மிகச் சிறிய அளவு பங்கு கொண்டிருக்கிறது. முட்டை சாப்பிடுவது நமது ரத்தத்தில் HDL மற்றும் LDL ஆகிய இரண்டு அளவுகளையும் அதிகரிக்கலாம். எனவே இதனால் LDL மற்றும் HDL விகிதத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
ஆகவே அதிக கொலஸ்ட்ரால் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் தாராளமாக வாரத்திற்கு மூன்று நாட்கள் முழு முட்டையையும் மற்றும் தினமும் முட்டையின் வெள்ளை கருவை மட்டுமே சாப்பிட்டு வரலாம். ஏனெனில் முட்டையில் பல்வேறு விதமான வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் குறிப்பாக வைட்டமின் B1 காணப்படுகிறது. அதிக கொலஸ்ட்ரால் இருக்கக்கூடிய நபர்கள் முட்டைகளை மிதமான அளவுகள் தங்களது உணவில் சேர்த்துக் கொள்வது பயனளிக்கும். முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களான வைட்டமின்கள் A, D, E, K, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் B12, ஃபோலேட் மற்றும் குறிப்பிட்ட அளவு புரதம் காணப்படுகிறது.
இதுவே முட்டையின் வெள்ளை கருவில் ஆல்புமின் புரோட்டீன் என்ற புரதம் உள்ளது. டயாபடீஸ் மற்றும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய நபர்கள் தங்களது உணவில் சாச்சுரேட்டட் மற்றும் அன்சாச்சுரேட்டட் கொழுப்புகளுக்கு பதிலாக தினமும் ஒரு முழு முட்டையை சேர்த்துக் கொள்ளலாம். இது அவர்களது கொலஸ்ட்ரால் அளவுகளையும், சர்க்கரை அளவுகளையும் அதிகரிக்காமல், அதே நேரத்தில் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.
முட்டையில் புரதம் மற்றும் கொழுப்பாகிய இரண்டுமே உள்ளது. அவற்றில் கார்போஹைட்ரேட்டுகள் கிடையாது. எனவே டயாபட்டிஸ் நோயாளிகள் தாராளமாக முட்டை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. முடிந்த அளவு முட்டைகளை வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது.