புகைப்பிடித்தல், மதுப்பழக்கம்… ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையை அதிகரிக்குமா? விளக்கம் இதோ
ஒரு சில நோய்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் பல்வேறு விதமான வாழ்க்கை முறை பழக்கங்களை பின்பற்றுவதன் மூலமாக நமது ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை நம்மால் ஏற்படுத்த முடியும். இதன் விளைவாக ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம்களில் பாசிட்டிவான தாக்கம் உருவாகிறது. ஒரு சில வாழ்க்கை முறை பழக்கங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியத்தை பாதிக்கின்றன.
இன்று உலக அளவில் மருத்துவம் சம்பந்தப்பட்ட செலவுகள் நம்மை அச்சுறுத்தி வருகின்றன. அதிக விலை காரணமாக ஒரு சிலருக்கு அத்தியாவசிய பராமரிப்பு கிடைக்காமல் போகிறது, குறிப்பாக குறைவான வருமானம் பெறக்கூடிய குடும்பங்களுக்கு இது மிகவும் சவாலான ஒரு சூழ்நிலையாக அமைகிறது. மருத்துவம் சம்பந்தப்பட்ட பொருளாதார சுமை இருப்பது நமது மனநிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி, அதனால் பதட்டம், மனச்சோர்வு மற்றும் மனநலம் சம்பந்தப்பட்ட சவால்களை உண்டாக்கலாம்.
வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை குறைவான பிரீமியம் தொகைக்கு வழிவகுக்கிறது. ஆரோக்கியமான உடல் எடையை பராமரிப்பது, நாள்பட்ட நிலைகளை சரியான முறையில் கவனித்துக் கொள்வது, முன்னெச்சரிக்கை பராமரிப்பில் ஈடுபடுவது போன்றவற்றை செய்வதன் மூலமாக நீங்கள் குறைவான ரிஸ்க் கொண்ட இன்சூரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கலாம்.
ஒரு சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஆரோக்கியமான பழக்கங்களுக்கு டிஸ்கவுண்டுகளையும் வழங்கி இன்சூரர்களை ஊக்குவிக்கின்றன.
உங்களது ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சில வாழ்க்கை முறை பழக்கங்கள் என்ன என்பதை முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்:
புகையிலை பயன்பாடு:
இது பல்வேறு உடல்நலக் கோளாறுகளுடன் தொடர்பு வைத்திருப்பதால் நிச்சயமாக ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் தொகையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
அதிகப்படியாக மது அருந்துதல்:
மதுவிற்கு அடிமையாகி தினமும் மது அருந்துவதால் கல்லீரல் நோய், இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் மற்றும் பிற உடல் நல கோளாறுகள் ஏற்படலாம். இதுபோன்ற நபர்களிடமிருந்து அதிக பிரீமியம் வசூலிக்கப்படுகிறது.
உடற்பருமன்:
அதிக BMI இருப்பது டயாபடீஸ் மற்றும் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கலாம். இது அதிக பிரீமியம் தொகைக்கு காரணமாக அமைகிறது. சமச்சீரான உணவு மற்றும் தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலமாக உங்களது உடல் எடையை ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது உங்களுடைய பிரீமியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும்.
முன்கூட்டியே நிலவும் நோய்கள்:
ஒரு சில நோய்கள் வாழ்க்கை முறை தேர்வுகளுடன் நேரடியாக இணைக்கப்பட்டிருக்காமல் இருக்கலாம். எனினும் ஏற்கனவே ஒரு சில நோய்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் பொழுது, அதுவும் பிரீமியம் தொகையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த நிலையை கட்டுக்குள் வைப்பதற்கு ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பின்பற்றுவது மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நடப்பது போன்றவற்றை செய்வதன் மூலமாக இன்சூரர்கள் தங்களுக்கு ஏற்படவுள்ள அபாயத்தை குறைக்கலாம்.
அதிக ரிஸ்க் நிறைந்த வேலைகளில் ஈடுபடுவது:
அதிக அபாயம் கொண்ட விளையாட்டுகளிலோ அல்லது வேலைகளிலோ ஈடுபடக்கூடிய நபர்களிடமிருந்து அதிக பிரீமியம் தொகை பெறப்படுகிறது.
நாம் பின்பற்றக்கூடிய அன்றாட வழக்கங்கள் சில நமது ஆரோக்கியத்தில் நாள்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தலாம். அவ்வாறான சில பழக்கங்களை இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
போதுமான உடல் செயல்பாடு இல்லாமல் இருத்தல்:
உடல் செயல்பாடு குறைவாக இருப்பது அதிக பிரீமியம் தொகைக்கு வழிவகுக்கும். வழக்கமான முறையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆரோக்கியத்தை பராமரிப்பது எதிர்காலத்தில் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அபாயங்கள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
போதுமான தூக்கம் இல்லாமை:
தொடர்ச்சியாக தூங்குவதில் சிக்கல்களை அனுபவிக்க கூடிய நபர்களுக்கு ஒரு சில உடல் கோளாறுகள் ஏற்படலாம். இது உங்களது பிரீமியம் தொகையை நாளடைவில் பாதிக்கலாம்.
மோசமான உணவு தேர்வுகள்:
பதப்படுத்தப்பட்ட உணவுகள் சர்க்கரை சேர்க்கப்பட்ட பானங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் போன்றவை நாள்பட்ட நோய்களுடன் தொடர்புடையவை. இது அதிக பிரீமியம் தொகையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தத்தை கையாளுதல்:
மனஅழுத்தத்தை சரியான முறையில் கையாள முடியாமல் போகும் பொழுது, அதனால் ஏராளமான உடல்நல கோளாறுகள் ஏற்படலாம். இதுவும் பிரீமியம் தொகையை நாளடைவில் பாதிக்கும்.
நீங்கள் பின்பற்றக்கூடிய ஒவ்வொரு வாழ்க்கை முறை வழக்கமும் உங்களுடைய ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் உடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது என்பதை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுங்கள்.