சனீஸ்வரபகவானை வணங்குவதால் பாவம் குறையுமா? சனீஸ்வரரின் படத்தை வீட்டில் வைத்துப் பூஜிக்கலாமா?

நவகிரகங்கள் என்பது இந்து மக்கள் வழிபடும் ஒன்பது கிரகங்களைக் குறிக்கிறது. அவை சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் கேது.
இந்த ஒன்பது கிரங்களால் தான் இந்த உலகமானது இயங்குகிறது என்கிறது பழங்காலப் புராணங்கள்.மேலும் இந்த நவகிரக வழிபாடு என்பது மிகவும் தொன்மையானதாகும். நவகிரகங்களைப் பொறுத்தவரையில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு, அதுமட்டுமின்றி சில நேரங்களில் வழிபடும்முறை கூட சற்று மாறுபடலாம்.
இந்த நவகிரகங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராக பார்க்கப்படுபவர் தான் சனீஸ்வரன். இயல்பாகவே பக்தர்கள் அதீத பயபக்தியோடு சனியை வணங்கி வருவது வழக்கம் தான். தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் சனிபகவானிற்கு எள்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது ஐதீகம்.
சனீஸ்வரபகவானை வணங்குதல் குறித்த சில சந்தேகங்களுக்கு பிரபல ஜோதிட நிபுணர் குமார சிவாச்சாரியார் சொல்வது என்ன?
“நவகிரகங்கள் நம்மை ஆட்சி செய்வதால்தான் நமது வாழ்க்கை மேடு, பள்ளங்களைத் தாண்டி நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சனி பகவானை இரும்புக் காரகன், சாதனைக் காரகன், மாங்கல்ய காரகன் என்று ஜோதிட சித்தாந்தங்கள் குறிப்பிடுகின்றன. ஆகவே சனிபகவானை வணங்கினால் அவர் சார்ந்த பாவங்களுக்கு மட் டுமே விமோசனம் அளித்து மன்னிப்பு வழங்குவார். ஒட்டுமொத்த பாவமும் குறையும் என்பது சாத்தியமல்ல.
ஆனால், மக்கள் சனிபகவானை உக்ர தெய்வ வரிசையிலேயே வைத்துள்ளனர். இதனால் சனிபகவானை காலம் காலமாக இல்லங்களில் வைத்து வணங்கும் வழக்கம் இருந்து வரவில்லை. இதில் பயம் கலந்த உணர்வும் இருக்கிறது. ஆகவே நவகிரகங்களுடன் இருக்கும் சனிபகவானை இல்லத்தில் வைத்து வணங்கலாம். தனியாக இருக்கும் படத்தை வீட்டில் வைத்தல் கூடாது. சனிபகவான் ஒரு மனிதனை நேரடியாகப் பார்த்தால் அவர் வீழ்ந்துவிடுவார் என்ற கருத்து நிலவுகிறது. ஆதலால் சனீஸ்வரரை எப்பொழுதும் பக்கவாட்டில் இருந்துதான் தரிசனம் செய்ய வேண்டும்”.