ரூ.2.9 கோடி நஷ்டம் ஏற்படுத்திய நாய்கள்… கார் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திற்கு உட்பட்ட ஹவுஸ்டன் நகரில் உள்ள கார் டீலர்ஷிப் நிறுவனம் ஒன்றில் இரண்டு தெரு நாய்களால் கார்களுக்கு தொடர்ந்து ஏற்பட்ட சேதத்தால் ரூ.2.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி மோட்டார்ஸ் என்ற கார் விற்பனையகத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை ஆய்வு செய்ததில், இரண்டு நாய்கள் கார்கள் மீது ஏறி பிராண்டுவதும், கார்கள் மீது உராய்வை ஏற்படுத்தும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது.

அதிலும் கார் ஒன்றின் மீதுள்ள பம்பரை, நாய் ஒன்று கடித்து, கால்களால் இழுத்து அப்புறப்படுத்தியிருக்கிறது. இறுதியாக நாய்களை பிடித்து, அதன் உரிமையாளர் உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இதில் ஒரு நாயின் பெயர் டேஷர் என்பது தெரிய வந்தது. மற்றொரு கருப்பு நாயின் பெயர் தெரியவில்லை.

கார் விற்பனையகத்தின் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களுக்கு இந்த இரண்டு நாய்களும் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் இவ்வாறான நடவடிக்கை தொடர்ந்துள்ளது.

நாய்களின் தொந்தரவு காரணமாக தங்கள் நிறுவனத்திற்கு வருவதற்கு வாடிக்கையாளர்கள் அச்சம் கொண்டனர் என்றும், ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டது என்றும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது. அதே சமயம், நாய்களால் கார்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்ட வகையில், தங்கள் நிறுவனத்திற்கு ரூ.2.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

தற்போது இரண்டு நாய்களையும் பிடித்து விலங்கு நல அமைப்பின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டது. இரண்டுக்குமே தலா 4 வயது இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கார்களை பாதுகாக்க :

இந்தியாவிலும் நாய்களால் கார்களுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது தொடர்பாக நிறைய உதாரணங்கள் உண்டு. பெயிண்ட் மீது உராய்வை ஏற்படுத்துவது, மேற்கூரை மீது ஏறி பிராண்டுவது என்று எண்ணற்ற சேட்டைகளை நாய்கள் செய்யக் கூடும்.

கார்களின் உள்ளே வாசனை திரவியங்களை நாம் அடித்து வைத்திருப்பதால், அந்த வாசத்தை நோக்கி ஈர்க்கப்பட்டு நாய்கள் இவ்வாறு செய்யக் கூடும். அதேபோல உணவுப் பொருள்கள் ஏதேனும் இருப்பின், மோப்பம் பிடித்துக் கொண்டு கார்கள் மீது அவை ஏறக் கூடும். ஆகவே கார்களின் உள்ளே எந்தவித வாடையும் இல்லாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல டயர், கார்களின் கீழ் பகுதியில் சில பூச்சி விரட்டி அல்லது மருந்துகளை நாம் தெளித்து விடலாம். அந்த வாடை பிடிக்காமல் நாய்கள் கார்களுக்கு அருகே வருவதை தவிர்க்கும். எப்போதுமே உங்கள் கார் வெளியிடத்தில் நிறுத்தப்பட்டிருந்தால் அதைச் சுற்றியிலும் தடுப்பு அமைத்து பாதுகாப்பு கொடுக்கலாம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *