இளமையில் இதையெல்லாம் செய்வதால் புற்றுநோய் வரலாம்… தவறை உடனே திருத்துங்கள்!
புற்றுநோய் பாதிப்பு என்பது சற்று பரவலாக காணப்படுவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மாற்றங்கள் எனலாம். புற்றுநோய் இன்று ஒரு தீவிர நோயாக பார்க்கப்படுகிறது.
புற்றுநோயை யாருக்கு வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தலாம். வயது மூப்பின்போதுதான் புற்றுநோய் வரும் என பலரும் நினைத்து வந்தாலும், குழந்தைகளில் இருந்து இளைஞர்கள் வரை சிறுவயதில் புற்றுநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவே தெரிகிறது. இருப்பினும், முதுமையில் புற்றுநோய் வர முக்கிய காரணம் இளமையில் மேற்கொண்ட சில தவறான பழக்கவழக்கங்கள் எனலாம்.
ஆரோக்கியமற்ற உணவு
நொறுக்குத் தீனிகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரையை அதிகப்படியாக உட்கொள்ளுதல் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, அவை புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். பழங்கள், காய்கறிகள் மற்றும் நார்ச்சத்து இல்லாத உணவின் காரணமாக, உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது. இதனால் செல்களின் பாதுகாப்பு பலவீனமடைகிறது.
குறைவான உடல் உழைப்பு
இன்றைய வாழ்க்கை முறையில், உடல் ரீதியான செயல்பாடு குறைந்துவிட்டது. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வது, வாகனங்களைப் பயன்படுத்துவது, விளையாட்டுகளில் ஈடுபாடின்மை ஆகியவை உடல் ஆரோக்கியத்தில் சீர்கேட்டை தரும். உடல் செயல்பாடு இல்லாதது உடல் பருமன் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிப்பது மட்டுமின்றி மேலும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கலாம்.
தூக்கமின்மை
இரவில் சரியான நேரத்தில் தூங்காதது, போதுமான நேரத்திற்கு தூங்காதது ஆகியவையும் உடல்நலத்தை பாதிக்கும். இது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தி உயிரணுக்களையும் சேதப்படுத்தும். நீண்டகால தூக்கமின்மை புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும்.
புகைபிடித்தல், மது அருந்துதல்
சினிமா முதல் நாம் புழங்கும் ஒவ்வொரு இடத்திலும் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடலுக்கு கேடானது என்ற வாக்கியத்தை தினமும் கடந்து செல்கிறோம். புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும் என்பது மருத்துவ ரீதியில் நிரூபணமாகி உள்ளது. இவை நுரையீரல் மற்றும் கல்லீரலுக்கு தீங்கு விளைவிப்பது மட்டுமின்றி, புற்றுநோய் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
புகைபிடிப்பதில் உள்ள ரசாயனங்கள் உங்கள் மரபணுவிலேயே சேதத்தை ஏற்படுத்துகின்றன. இது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சிக்கு வழி வகுக்கலாம். அதே நேரத்தில், அதிகப்படியான ஆல்கஹால் உட்கொள்வது உடலில் ஈஸ்ட்ரோஜனின் அளவை அதிகரிக்கும், இது சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
சரும பாதுகாப்பில் அக்கறையின்மை
சன்ஸ்கிரீனை போன்ற சரும பாதுகாப்பை பயன்படுத்தாமல் அதிக நேரம் வெயிலில் செலவிடுவது பிரச்னையை ஏற்படுத்தலாம். இதனால் சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சருமத்தை தாண்டி செல்களை சேதப்படுத்தி, தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கச் செய்யும்.
எப்படி தடுப்பது?
மேலே குறிப்பிட்ட சில தவறுகளை சரிசெய்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவு உண்ணுதல், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல், போதுமான தூக்கம் போன்ற பழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்து, புற்றுநோயின் அபாயத்தை குறைக்கலாம்.
புற்றுநோய் திடீரென்று ஏற்படாது; இளம் வயதில் எடுக்கப்படும் முடிவுகள் உங்கள் எதிர்கால ஆரோக்கியத்தை தீர்மானிக்கிறது. எனவே, தற்போதிருந்தே உடல் நலன் சார்ந்த விஷயத்தில் அதிக கவனத்துடன் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் எந்த பிரச்னையும் வராது. வேறு சில காரணங்களாலும் புற்றுநோய் ஏற்படும் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.