அயோத்தி கோவிலுக்கு கோடிகளில் நன்கொடை கொடுத்தாரா நடிகர் பிரபாஸ்?
அயோத்தி ராமர் கோவிலுக்கு நடிகர் பிரபாஸ் பல கோடிகளில் நன்கொடை கொடுத்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் வரும் 22ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. அதில் கலந்துகொள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. நடிகர்கள் அமிதாப்பச்சன் முதல் ரஜினிகாந்த் வரை என பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. ராமர் கோவில் திறப்பு பற்றி பல திரை நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் வெளியான தெலுங்குப் படமான ஹனுமனின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் 5 ரூபாய் ராமர் கோவிலுக்கு வழங்கப்பட உள்ளதாக அப்படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிரஞ்சீவி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகர் பிரபாஸ் மிகப்பெரிய தொகை ஒன்றை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் செய்தி உலவி வந்தது. அந்தத் தொகை 50 கோடியா அல்லது 100 கோடியா என ரசிகர்களுக்குள் விவாதங்களும் நடந்து வந்தன. இந்நிலையில், நடிகர் பிரபாஸ் ராமர் கோவிலுக்கு அந்த மாதிரியான நன்கொடை எதுவும் தரவில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சொல்லப்போனால், திரைநட்சத்திரங்களை தேடித்தேடி அழைப்பிதழ் வழங்கியவர்கள் பான் இந்தியா ஸ்டாராகக் கருதப்படும் பிரபாஸுக்கு அழைப்பிதழே தரவில்லை எனவும் கூறப்படுகிறது.